தமிழகம்

காங்கிரஸில் 39 தொகுதிகளுக்கு 129 பொறுப்பாளர்கள் நியமனம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள காங்கிரஸ் சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரிக்கு அதிகபட்சமாக 18 பேரை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதையடுத்து, தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள தொகுதிதோறும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது பெயரை தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார்.

இதில், காங்கிரஸின் அனைத்து கோஷ்டிகளையும் சேர்ந்த நிர்வாகிகள், அவர்களது குடும்பத்தினர் இடம் பெற்றுள்ளனர்.

அரக்கோணம் தொகுதிக்கு அந்தத் தொகுதி வேட்பாளர் நாசே.ராஜேஷின் தந்தை நாசே.ராமச்சந்திரனும் தென்காசி தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் அருணாச்சலத்தின் மகன்மோகன் அருணாச்சலமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி தொகுதிக்கு அதிகபட்சமாக 18 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் ஜாண் ஜேக்கப் மற்றும் விஜயதாரணி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். தேர்தலில் போட்டியிடாத முன்னாள் அமைச்சர்கள் எவரும் பொறுப்பாளர்களாக நியமிக்கப் படவில்லை.

39 தொகுதிகளுக்கும் 129 பேர் பொறுப்பாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.

இதுதவிர அந்தந்தத் தொகுதியில் இன்னும் கூடுதலாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றால், மாநிலத் தலைமை ஒப்புதலுடன் நியமித்துக் கொள்ளலாம் என்று ஞானதேசிகன் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT