பண்ருட்டி அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த எனதிரிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட தென்பெண்ணையாற்றில் 2 ஆண்டுகளுக்கு 4.8 ஹெக்டேர் பரப்பளவில், 48 ஆயிரம் மில்லியன் யூனிட் மணல் அள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி வழங்கியது. இந்த மணல் அள்ளும் ஒப்பந்தப் பணி விழுப்புரத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளருக்கு வழங்கப்பட்டது.
ஒப்பந்தப் பணி வழங்கப்பட்டு, மணல் அள்ளும் பணி தொடங்கிய நிலையில் எனதிரிமங்கலம், காவனூர், அக்கடவல்லி, உளுத்தாம்பட்டு, பைத்தாம்பாடி, சத்திரம், வேலங்காடு உள்ளிட்ட 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், மணல் அள்ளுவதால் தங்களின் கிராமப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டும் குறைந்து வருவதால், குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டு, அக்டோபர் மாதம் முதல் தொடர் போராட்ட நடவடிக்கைளில் கிராம மக்களும், எதிர்க் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து பண்ருட்டி வட்டாட்சியர் முன்னிலையில் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி திடீரென எனதிரிமங்கலம் தென்பெண்ணையாற்றில் இருந்து லாரிகளில் மணல் அள்ளப்பட்டு பண்ருட்டி அடுத்த ஏரிப்பாளையம் சாலையோரத்தில் மணல் குவிக்கப்பட்டு விற்பனைக்காக தயார் செய்யும் பணிகள் நடைபெற்றது.
இதுகுறித்து தகவலறிந்த எனதிரிமங்கலம் உள்ளிட்ட 7 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஏரிப்பாளையம் பகுதியில் திரண்டதால், மீண்டும் மணல் குவாரி இயங்காத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் வருவாய்த்துறை சார்பில் மக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்திய பின்னர் குவாரி இயக்குவது குறித்து முடிவு செய்வதாக உறுதியளித்ததன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 24 மற்றும் 27-ம் தேதிகளில் மீண்டும் மணல் அள்ளும் பணி தொடங்கிய நிலையில், மணல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி சாலை மறியல், கருப்புக் கொடி போராட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இருப்பினும் கிராம மக்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி மணல் குவாரி இயங்கத் தொடங்கியது.
இதையடுத்து கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலரும், திட்டக்குடி சட்டப்பேரவை உறுப்பினருமான வி.கணேசன் தலைமையில் இன்று (திங்கள்கிழமை) மணல் குவாரியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.