தமிழகம்

பள்ளிக்கல்வித் துறை செயலருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: இடைநிலை ஆசிரியர்களின் காலவரையற்ற போராட்டம் வலுக்கிறது - திமுக, பாமக உட்பட அரசியல் கட்சிகள் ஆதரவு

செய்திப்பிரிவு

பள்ளிக்கல்வித் துறை செயலருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து,  தங்களின் உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு  திமுக, பாமக, அமமுக, விசிக ஆகிய அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு இடையிலான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்   என்ற கோரிக்கையை  வலியுறுத்தி   கடந்த 3 நாட்களாக  சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு  தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் 50 பெண்கள் உட்பட 80-க்கும் அதிகமானவர்கள் உடல்நலக்குறைவால் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ்,   ரெக்ஸ் ஆனந்தகுமார் தலைமையிலான 10 உறுப்பினர்களைக் கொண்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஒரு நபர் குழு விரைவில் அறிக்கை தர இருப்பதால்,  ஜனவரி 7-ம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க அரசு  சார்பில் வலியுறுத்தப்பட்டது.

அதை ஏற்க போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  மறுத்ததால்  பேச்சுவார்த்தை தோல்வியில்  முடிந்தது.  தங்களின் கோரிக்கையை அரசு ஏற்கும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நீடிக்கும் என்று இடைநிலை இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க  பொதுச் செயலாளர் ராபர்ட்,  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்.  பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், “இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருவதை அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.  இந்த பிரச்சினையில் கவுரவம் பார்க்காமல்  முதல்வர் பழனிசாமி உடனே தலையிட்டு, ஆசிரியர்களை அழைத்துப் பேசி அவர்களின் ஊதிய முரண்பாட்டை  அகற்ற வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் சந்திக்க வேண்டும்

 இடைநிலை ஆசிரியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த  அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஊதிய முரண்பாடு சரிச்செய்யப்படும் என உறுதி அளித்தார். ஆனால்,  அதை இந்த அரசு செய்யவில்லை.  உண்ணாவிரதம் இருக்கக் கூடியவர்களை சந்தித்து உறுதிக் கொடுத்து, அவர்கள் போராட்டத்தை அரசு முடித்து வைக்க வேண்டும்” என்றார்.  

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.  இந்தப் போராட்டம் தொடர்பாக  பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள  அறிக்கையில்,  “போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை முதல்வர் அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார். 

 இதற்கிடையே  இந்தப் போராட்டம் குறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் டி.ஜெயக்குமார்,  ‘‘இடைநிலை ஆசிரியர்களின்  ஊதிய முரண்பாடு குறித்து சித்திக் தலைமையிலான ஒருநபர் குழு அளிக்கும் அறிக்கையின் படியே அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒரே நாளில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற முடியாது, அரசின் நிதி நிலைமையை புரிந்துக் கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கும், மாணவர்
களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்’’ என்றார்.

மு.க.ஸ்டாலின் - தினகரன் சந்திப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை டிபிஐ வளாகத்துக்கு நேற்று காலை நேரில் சென்று ஆசிரியர்களின்  போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் புறப்பட்டு செல்லும் நேரத்தில், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன்  வந்தார். இதனால் எதிர்பாராத விதமாக  ஸ்டாலினும், தினகரனும் நேருக்கு நேர் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது.   அப்போது இருவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்து, நலம் விசாரித்துக் கொண்டனர்.

SCROLL FOR NEXT