தமிழகம்

குட்கா முறைகேடு வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கர், பி.வி.ரமணாவுக்கு சிபிஐ லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்

செய்திப்பிரிவு

குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று 2011 முதல் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் வாயில் போட்டு மெல்லும் புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து 2013-ல் குட்கா மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் தடை செய்யப்பட்டன. ஆனால், தடை செய்யப்பட்ட பிறகும் கூட தனியார் நிறுவனம், கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுத்து தங்கள் வர்த்தகத்தை சட்ட விரோதமாகத் தொடர்ந்ததாக அம்பலமானது.

திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 26 அன்று குட்கா முறைகேட்டை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ குட்கா விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்த சிபிஐ  சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை, குண்டூர் உள்ளிட்ட 35 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டது.

குட்கா தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர்கள், மற்றும் பிற அரசு ஊழியர்கள், விற்பனை வரித்துறை அதிகாரிகள், சுங்க மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, தமிழ்நாடு டிஜிபி டி.கே. ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ், உதவி ஆணையர் மன்னர் மன்னன், வில்லிபுரம் டிஎஸ்பி ஷங்கர், ஆய்வாளர் சம்பத் குமார், உணவு மற்றும் மருந்துத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளான செந்தில் முருகன், டாக்டர் லஷ்மி நாராயணன், இ.சிவகுமார், மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள் ஆர்.குல்சார் பேகம் ஆர்.கே.பாண்டியன், ஷேஷாத்ரி, விற்பனை வரித்துறையைச் சேர்ந்த பன்னீர் செல்வம், குறிஞ்சி செல்வம், கணேசன், ஜேஎம் நிறுவனத்தின் ப்ரமோட்டர்கள் மற்றும் இயக்குநர்களான ஏ.வி.மாதவராவ், உமா சங்கர் குப்தா, ஸ்ரீநிவாஸ் ராவ் ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் குட்கா குடோன் உரிமையாளர் மாதவ்ராவ் உட்பட 7 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். இதில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது.

இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் பெயர் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது முதற்கட்ட குற்றப்பத்திரிகைதான் என சிபிஐ தரப்பு தெரிவித்தது. இந்நிலையில் சிபிஐயின் லஞ்ச ஒழிப்புத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனை கடந்த வாரம் விசாரணை நடத்தியது.

அவரது வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகிய இருவரையும் நாளை விசாரணைக்கு ஆஜராக  சிபிஐயின் லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்படும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT