தமிழகம்

புதுச்சேரி வனத்துறை நகர்ப்புற வனத்தில் 3 கி.மீ. தொலைவு பொதுமக்கள் நடந்து செல்ல அனுமதி

செ.ஞானபிரகாஷ்

வனத்துறை நகர்ப்புற வனத்தில் மொத்தம் 3 கி.மீ. தொலைவு  நடந்து சென்று இயற்கை சூழலை தரிசிக்க பொதுமக்கள் அனுமதிக்கும் முறை இன்று முதல் தொடங்கியது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கடந்தவாரம் வனத்துறைக்கு ஆய்வுக்குச் சென்றிருந்தார். அப்போது வனத்துறையின் நகர்ப்புற வனத்தில் மக்களை அனுமதிக்க அறிவுறுத்தியிருந்தார். அதைத்தொடர்ந்து இன்று வார இறுதி நாள் ஆய்வில் நீதிமன்றம் அருகேயுள்ள வனத்துறை அலுவலகத்துக்குச் சென்றார். வனத்துறையில் இருந்து ஒட்டி அமைந்துள்ள காட்டில் மொத்தம் 3 கி.மீ. தொலைவுக்கு பொதுமக்கள் நடைபயணம் செல்லும் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆளுநர், பொதுமக்கள், அதிகாரிகள் தொடக்க நிகழ்வில் பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளுக்கு ஆளுநர் பிறப்பித்த உத்தரவு:

''வனத்துறை வளாகத்தையும், வனப்பகுதியையும் தொடர்ந்து தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். இங்கு சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி கண்காணிக்க வேண்டும். அத்துடன் கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகள், விலங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டள்ளதையும் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி அமைப்பது அவசியம். அத்துடன் பறவைகள், விலங்குகள் பெயர்களை எழுதி வைக்க வேண்டும்.

வனத்தில் மூலிகைகளை நட வேண்டும். குறிப்பாக வேம்பு, ஆலோவேரா தொடங்கி பல மூலிகைகளை நட ஆயுஷ் உதவியையும் பெறலாம்.வாட்ஸ் அப் குழு தொடங்கி அதிகாரிகள், ஊழியர்களை அதில் இணைத்து அலுவலக செய்திகளை பகிர வேண்டும். இது துறை இயல்பாய் செயல்பட உதவும்.

தற்போது நகர்ப்புற வனத்தை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் பார்வையிட காலை 6 முதல் இரவு 7 வரை கோடையிலும், குளிர்காலத்தில் காலை 7 முதல் மாலை 6 வரையிலும் திறந்திருக்கலாம். ஞாயிறு கண்டிப்பாக திறந்திருக்க வேண்டும். விடுமுறை நாளாக திங்கள்கிழமையை அறிவிக்கலாம்''.

இவ்வாறு கிரண்பேடி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT