ஒவ்வொரு சாதிக்கும் ஒரு டிஎன்ஏ இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் நடத்தப்பட்ட கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சி, பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், "நாடார் சமூகம் ஆன்மிகம் மற்றும் வணிகம் ஆகியவற்றில் தனித்தன்மை கொண்டது. வெல்லம் உற்பத்தி, கழுதைகள் மூலம் பொருட்களை ஏற்றிச் சென்று வணிகம் செய்வது ஆகியவை நாடார் சமூகத்தினரிடையே காணப்பட்ட தனித்த அடையாளங்கள். ஷிவ நாடார் அத்தகைய வணிகத் திறமை மூலம் இந்தியாவின் பெரிய ஐடி நிறுவனத்தை நிறுவினார்.
ஒவ்வொரு மனிதருக்கும் டிஎன்ஏ உள்ளது. அதேபோல், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது. அந்த மரபணுவில் குறிப்பிட்ட சமுதாயத்தின் அடையாளம் இருக்கும். பரம்பரை பரம்பரையாக அந்த அடையாளம் ரத்தத்தில் ஊறி இருக்கும்.
சாதிப் பற்று இருப்பதில் தவறு கிடையாது. சாதி வெறி இருக்கக் கூடாது. மற்றொரு சாதியை வேரறுப்போம் என்ற எண்ணம் கொண்டிருக்கக் கூடாது. மற்ற சாதிகளும் வளர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. தமிழக சட்டப்பேரவையில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த 13 பேர் எம்எல்ஏக்களாக உள்ளனர். முன்பு, 25 எம்எல்ஏக்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை காலப்போக்கில் குறைந்துவிட்டது. இந்த நிலைமை மாற வேண்டும்." என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.