தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீஸ்ரீ ர்விசங்கரின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி தந்த அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் நிர்வாகம் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை பொறுப்பின்கீழ் உள்ள ஒரு கோயில். பழைமையானது என்பதால், மத்திய அரசின் தொல்பொருள் துறையின் அதிகாரத்தின்கீழ் உள்ளது.
ராஜராஜன் சிலையை கோயிலுக்குள் வைக்க மறுத்த தொல்லியல் துறை
கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் ராஜராஜ சோழனுக்கு சிலை செய்து, அதை அக்கோயிலுக்குள் நுழைவுப் பகுதியிலோ அல்லது முக்கியப் பகுதியிலோ வைக்க, மத்திய அரசின் தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்டார். உள்ளே வைத்தால், அதன் புராதனச் சீர்மை கெட்டுவிடும்; அனுமதி கிடையாது என்று மத்திய அரசு மறுத்தது..
அதனை கருணாநிதி ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனால்கூட, அவன் கட்டிய கோயிலில் அவனே கூட நுழைய முடியாத நிலை உள்ளது; கோயில் கட்டி, பிராமணக் கொடியவர் கொள்ளையர்களின் கூடாரமாக்காதீர் என்று மறைமுகப் பாடத்தை மக்களுக்குச் சொல்லாமற் சொல்லிக் கொடுத்தார்.
கோயிலுக்குள் யோகா - பஜனையா?
சில நாள்களுக்கு முன் 'வாழும் கலை' அமைப்பின் தலைவர் ரவிசங்கர் அக்கோயிலுக்குள் 'வாழும் கலை' கண்காட்சி - பக்தி, யோகா என்று ஏதோ ஏதோ சொல்லி, மத்திய - மாநில அரசுத் துறைகளிலிருந்து தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஒவ்வொருவருக்கும் ரூ.3,500 டிக்கெட் என்று அறிவித்தது குறித்து, பக்தர்களும், பொது அமைப்பினரும் இந்தக் 'கோலாகலக் கொள்ளைத் திட்டத்தை' எதிர்த்து அணி திரண்டனர். உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒருபுறம், மக்கள் மன்றத்தில் முற்போக்கு கட்சிகள், இயக்கங்களின் பேரெதிர்ப்பு மறுபுறம்!
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதி கிடைத்தது!
அந்நிகழ்ச்சி நடத்திட தடை விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சரியான தீர்ப்பு! உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியாயமான கேள்விகளை மாநில அரசின் இந்து அறநிலையத் துறை மற்றும் மத்திய அரசின் தொல்பொருள் துறைகளை நோக்கிக் கேட்டனர். அவ்விரு துறைகளும் ஒன்றை ஒன்று காட்டி ஏதோ பொருத்தமில்லாத சமாதான விளக்கப் பதிலை அளித்தனர்.
ரவிசங்கர் பஜனை நடத்த அனுமதி கேட்டார்; அதனால், தந்தோம் என்று ஒரு ஏனோதானோ என்ற முறையில் பதிலாகத் தந்தனர். ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆதிகேசவலு அமர்வு ஓங்கி மண்டையில் அடித்ததுபோல், யார் கேட்டாலும் கோயிலில் 'பஜனை' நடத்திட அனுமதி தந்துவிடுவீர்களா? தொன்மைக்காலப் புராதனச் சின்னமான தஞ்சை பெரிய கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதுபோன்ற பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பது அனைவரின் கடமை. கோவிலின் பழைமையையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டும். இது தொடர்பான விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.
நியாயத் தராசினை நீதிபதிகள் சாயாமல் சரியாகப் பிடித்துக் கேள்விக் கணைகளைத் தொடுத்தனர். பாராட்டுகிறோம்.
யார் இந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்?
பாபாநாசத்தில் உள்ள ரவி என்பவர் மாணவரான நிலையில் ஓடிப்போனவர். வடக்கே போய் ரவிசங்கராகி, ஸ்ரீஸ்ரீ ஆகி பிறகு அவர் வாழும் கலை எனும் 'ஆன்மிக அவதாரம்' எடுத்து, கோடி கோடியாக சொத்து சேர்த்து, அவரது வாழும் (சுரண்டல்) கலை அமைப்பினை உருவாக்கி, ஆட்சிகளுக்கு 'ராஜகுருவாகி' சட்டத்தை அவர் கீழ் போட்டு அதன்மீது தனது சிம்மாசனத்தினைப் போட்டு, மோடி ஆட்சியில் தனி சாம்ராஜ்ஜியம் நடத்தி வருகிறார்!
இல்லையேல், ராணுவத்தினைப் பயன்படுத்தி யமுனை நதிக்கரையில் பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்தியிருப்பாரா? சுற்றுச்சூழலைக் கெடுத்த குற்றவாளியாக உச்ச நீதிமன்றத்தால் 25 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதே! அந்த அபராதம் பிறகு 5 கோடி ரூபாயாக்கப்பட்டது. அதனையும் செலுத்தினாரா என்று தெரியவில்லை. வடக்கே அந்தக் கூத்து; சட்ட விரோதமாக இங்கே தெற்கே இத்தகைய நூதன பண வசூல் கொள்ளை! இதற்கு மத்திய - மாநில அரசுகள் துணை போனது எத்தகைய வெட்கக்கேடு - கண்டனத்திற்குரியது.
கோவையில் ஒரு சாமியாரின் சாம்ராஜ்ஜியம்!
இதுபோலவே, கோவைக்கு அருகில் - நடிகர் திலகத்தையெல்லாம்கூட தோற்கடிக்கும் வகையில், ஈஷா உலகம் என்ற பெயரில் சட்ட விரோத நில ஆக்கிரமிப்பாளர் ஒருவர். அதற்குப் பிரதமர் வருகை; முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பங்கெடுத்தார். என்னே கொடுமை! மதச்சார்பற்ற அரசின் தலைவர்கள் 'சாமியார்கள்' 'காவிகள்' என்றால், இப்படி சட்ட விரோதச் செயல்களுக்கு 'சர்வம் சரணாகதி' என்று சட்டத்தைப் பலியிடலாமா?
சட்டத்தின்முன் அனைவரும் சமம் - காவிக் குற்றவாளிகளைத் தவிர என்பதா? இதற்குக் காரணமான ரவிசங்கர் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் மீது சரியான நடவடிக்கை பாயவேண்டும்!
டெல்டா விவசாயிகள், மக்கள் வீடிழந்து எல்லாவற்றையும் இழந்துள்ள நிலையில், இந்த பக்தி வேஷக் கூத்தை எப்படி சகிப்பது?
அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை!
உடனே தகுந்த நடவடிக்கை இல்லை என்றால், மாபெரும் மக்கள் போராட்டம் அங்கே எரிமலைபோல் வெடிப்பது உறுதி" என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.