அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு: அதிமுகவில் இருந்து மேலும்15 பேர் வெளியே வருவார்கள், அவர்கள் யார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த செம்மாண்டம்பாளையத்தில் பகுதிநேர ரேஷன் கடையை வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: இன்று அரசுக்கு ரூ.13 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில், ஒரு நாளைக்கு வட்டி மட்டுமே ரூ.347 கோடி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. இந்த இக்கட்டான காலத்திலும் பல்வேறு நலத்திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகிறது.
மிக விரைவில் அதிமுகவில் இருந்து 15 பேர் வெளியே வர உள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கூட்டம் கூட்டி பேசி வருகின்றனர். இன்று பலரால் தேர்தல் களத்தில் நிற்கக்கூட முடியவில்லை என்பதே நிஜம். தேர்தலில் ‘நான் வருவேன், நீ வருவாய்’ என பேசியவர்கள் எல்லாம் இரண்டு, மூன்றாம் இடத்துக்கு சென்றுவிட்டனர், நல்லவேளையாக அதிமுகவில் இருந்து பழனிசாமி என்னை நீக்கினார். அதனால்தான் தவெகவில் இணைந்து மக்கள் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது’ என்றார்.
தொடர்ந்து, பெருந்துறையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையனிடம், ‘அதிமுகவில் இருந்து 15 எம்எல்ஏக்கள் வெளியே வருகிறார்களா?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்து பேசும்போது,“அதிமுகவில் இருந்து 15 நபர்கள் வருவார்கள் என்று தான் சொல்லியுள்ளேன். யார் வருவார்கள் என சொல்லவில்லை.
செய்தியாளர்களே கற்பனை செய்துகொண்டு, எம்எல்ஏக்கள் வருகிறார்களா என கேட்கக்கூடாது. யார் வருவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதிமுகவில் ஏற்கெனவே பல பிரச்சினைகள் வந்துள்ளன. தற்போது அதிமுகவில் நடக்கும் பிரச்சினையை பழனிசாமியும், வேலுமணியும் இணைந்துதான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.