தவெக அரசையும், சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரையும் பாராட்டி பேசிய மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா. படம்: நா.தங்கரெத்தினம்
மதுரை: மதுரை மாநகராட்சியில் உள்ள 15 அதிமுக கவுன்சிலர்களும் ஒட்டுமொத்மாக தவெகவிற்கு மாற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஓராண்டாக அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் என்று தவெக-வுக்கு படையெடுப்போர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மதுரை மாவட்டத்தில் அதிமுகவின் மும்மூர்த்திகளான முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், அமைப்புச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் கட்சியை ஓரளவு கட்டுக்கோப்பாக வைத்திருப்பதால், முக்கிய நிர்வாகிகள் யாரும் இதுவரை தவெகவுக்கு செல்லவில்லை.
மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் ரூபினியின் கணவரும், மாநகர் பொருளாளருமான குமார், மற்றொரு கவுன்சிலர் வசந்தாவின் மகனும், மாணவர் அணி செயலாளருமான பார்த்தீபன் ஆகியோர் தவெகவுக்கு சென்றனர். இந்த 2 பெண் கவுன்சிலர்களும் தொடர்ந்து அதிமுகவிலேயே நீடிக்கின்றனர். ஆனால், மாநகராட்சி கூட்டத்தில் தவெக ஆதரவு நிலைபாட்டுடன் அவர்கள் செயல்படுகின்றனர்.
நேற்று முன்தினம் நடந்த மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் மாநகராட்சி அதிமுக எதிர்க் கட்சித் தலைவரும், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்டச் செயலாளருமான சோலைராஜா பேசுகையில், “மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டை தவெக அரசு மிக சிறப்பாக விசாரிக்கிறது. திமுகவைச் சேர்ந்த மண்டலத்தலைவரின் கணவரை கைது செய்துள்ளனர்.
மற்றவர்களை போலீஸ் தேடுகிறது. சட்டத்துறை அமைச்சரின் நடவடிக்கையால் தூங்கி கொண்டிருந்த விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. எதிர் கட்சியாக தவெக இருந்தாலும், அவர்கள் நடவடிக்கை சிறப்பாக இருந்தால் பாராட்டவும் செய்வோம். இவ்வழக்கில் போலீஸார் கையை கட்டிப் போட்டு விட்டு கண் துடைப்புக்கு திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுத்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டபிறகு சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாருக்கு நன்றி சொல்வேன்,” என்றார்.
மாநிலத்தில் அதிமுகவும், தவெகவும் எதிரும், புதிருமாகச் செயல்படும் நிலையில் மதுரை மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள், ஒட்டு மொத்தமாக தவெக அரசையும், சட்டத்துறை அமைச்சரையும் பாராட்டி வருவது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவிலுள்ள 15 மாநகராட்சி கவுன்சிலர்களும் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் ஐக்கியம் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிமுக எதிர்கட்சித்தலைவர் சோலைராஜாவிடம் கேட்டபோது, ”சொத்துவரி பிரச்சினையில் திமுக மண்டலத் தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சில மண்டலத் தலைவர்கள் தலைமறைவாகி உள்ளனர். எதிர்க்கட்சியாக இருந்தாலும் நாங்கள் நல்லதை வரவேற்போம், தீமையை எதிர்ப்போம். அந்த வகையில் தவெக அரசின் நடவடிக்கைகளை ஆதரிக்கிறோம்,” என்றார்.