திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலில் சேதமடைந்த நெல் வயல்கள் குறித்து தெளிவான கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கஜா புயல் தாக்கியதில் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 950 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி முற்றிலும் அழிந்து விட்டதாக வேளாண்மைத்துறை சார்பில் கடந்த 27 ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்துக்கு வந்த தமிழக முதல்வரிடம் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி அறுவடை நிலையை எட்டி இருந்த தாளடி பயிர்கள் அல்லது முன்பட்ட சம்பா சாகுபடி நெற்பயிர்கள் கஜா புயலில் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விவசாயிகள் உள்ளிக்கோட்டை விவசாயி வெங்கடேசன் கூறியபோது,''எனது வயலில் 11 ஏக்கர் தாளடி அறுவடைப் பயிர் முற்றிலும் அழிந்து விட்டது நெல்மணிகள் பெரும்பாலும் வயலிலேயே கொட்டி முளைத்துவிட்டன. அறுவடை செய்தாலும் நெல்மணிகள் தேறாது என்ற நிலையே உள்ளது. எனவே தாளடி மற்றும் முன் பட்ட சம்பா சாகுபடி விவசாய நிலங்கள் முழுமையையும் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்'' என்றார்.
விவசாயி பி.கே. கோவிந்தராஜன் கூறியபோது, ''திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை உட்பட ஆற்றுப் பாசன விவசாய நிலங்களில் பெரும்பாலும் சி.ஆர் .1009 என்கின்ற நெல் ரகங்களைப் பயிரிட்டுள்ளார்கள். அந்தப் பயிர்கள் தற்போது தண்டு உருண்டு கதிர்கள் வெளிவர வேண்டிய நிலையில் புயல் தாக்கியதில் அதன் இலைகள் சேதமடைந்துள்ளன.
பயிர்களின் முனைகள் மஞ்சளாகத் தென்படுகிறது இதனால் தற்போது பயிர்கள் சாய்ந்துவிடாமல் பசுமையாகத் தெரிந்தாலும் மகசூல் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே தற்போதைய கணக்கெடுப்புப் பணியில் மகசூல் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ள நெற்பயிர்களின் பரப்பளவையும் சேர்க்கவேண்டும்'' என்று கூறினார்.