மேகேதாட்டு அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைமையின் நிலைப்பாடு குறித்து பதில் அளிப்பதை அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தவிர்த்துவிட்டுப் புறப்பட்டார்.
பதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. மாநிலத் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக அகில இந்திய பொதுச்செயலாளரும், புதுச்சேரி மாநிலத்துக்கான காங்கிரஸ் கட்சி மேலிடப் பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் கலந்து கொண்டு கேக் வெட்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கினார்.
விழா முடிவில் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் பேச கட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அடுத்தடுத்த பணிகள் இருந்ததால் அங்கிருந்து புறப்பட்டார்.
அவரிடம், மேகேதாட்டு அணை கட்டுவதற்கான ஆரம்ப கட்டப் பணிகளில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதில் காங்கிரஸ் கட்சி தலைமையின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து செய்தியாளர் கேள்வி கேட்டனர். ''இந்த விவகாரத்தில் மாநில தலைவர் பதில் அளிப்பார். இது மாநிலப்பிரச்சினை'' என்று முகுல் வாஸ்னிக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து மேகேதாட்டு தொடர்பாக கட்சித் தலைமையின் நிலைப்பாடு குறித்துக் கேட்டதற்கு, பதில் அளிப்பதைத் தவிர்த்துப் புறப்பட்டார்.