கடந்த 16-ம் தேதி 2018 அன்று ராயப்பேட்டை ஒய்எம்சிஏவில் திமுக பொதுக்கூட்டத்தில் போலீஸாரை தரக்குறைவாகத் திட்டி மிரட்டிய பெண் பிரமுகர் மீது போலீஸார் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா அறிவாலயத்திலும் அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்திலும் நடைப்பெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சோனியா, ராகுல் உச்சகட்ட எஸ்பிஜி பாதுகாப்பில் உள்ளதால் பொதுக்கூட்டம் நடக்கும் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அனைவரும் கடுமையான சோதனைக்குப் பின்னரே அனுப்பப்பட்டனர். அப்போது தலைவர்கள் அமர்ந்திருக்கும் விஐபி பகுதிக்கு தாமதமாக வந்த டிப்டாப் பெண் பிரமுகர் ஒருவர் அழைப்பிதழைக் காட்டி உள்ளே அனுமதிக்குமாறு கேட்டார்.
ஆனால் உள்ளே கூட்டம் அதிகம் உள்ளது எனக்காரணம் காட்டி மணிமேகலை என்கிற பெண் காவல் உதவியாளர் அப்பெண் பிரமுகரை அனுமதிக்க மறுத்தார். இதையடுத்து அந்தப் பெண் பிரமுகர் போலீஸாரைத் திட்ட ஆரம்பித்தார். அப்போது ஒரு போலீஸ்காரர் உள்ளே இடமில்லை, எஸ்பிஜி சோனியா பாதுகாப்புக்கு வந்துள்ளவர்கள் விட மாட்டார்கள். எங்களுக்கு விடக்கூடாது என்று ஆசையா என்று அந்தப் பெண்ணிடம் தெரிவித்தார்.
அப்போது அந்தப் பெண் பிரமுகர் பெண் உதவியாளரைப் பார்த்து வசவுச் சொற்களால் திட்டினார். (பின்னால் உடன் வந்தவர்கள் வீடியோ எடுத்துக்கிட்டிருக்காங்க என எச்சரித்தார்) அப்போது ஒரு போலீஸார், 'கிளம்புங்கள்' என்று கூற, ''யார் கிளம்பணும், நாங்க கிளம்பறதுக்கு வரவில்லை, முறையா அழைப்பிதழோடு வந்திருக்கோம்'' என போலீஸாரிடம் மீண்டும் எகிற, ''சரி பிரச்சினையை விடுங்கள்'' என காவலர் கூறுகிறார்.
''பிரச்சினையை விட்டு விடுகிறோம். காவல்துறை தன் கடமையைச் செய்யவேண்டும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என காந்தி எழுதியிருப்பது உங்களுக்குத் தெரியும். சும்மா இந்த அராஜகம் எல்லாம் என்கிட்ட வைத்துக்கொள்ளாதீர்கள். அதெல்லாம் ஜெயலலிதா, சசிகலாவோடு முடிந்து போச்சு தெரியுமா?'' என மீண்டும் அப்பெண் பிரமுகர் திட்டுகிறார்.
வேலைமெனக்கெட்டா அங்கிருந்து வருகிறோம் என்று கோபமாகப் பேசிய பெண் பிரமுகர், திமுக தொண்டரணியினரைப் பார்த்து, ''எதுக்குடா நீங்க இங்க நிக்கிறீங்க பாதுகாப்பு கொடுக்கத்தான் நிக்கிறீங்க'' என திட்டுகிறார். அவர் திட்டும் காட்சி காணொலியாக வாட்ஸ் அப் வலைதளங்களில் பரவியது. அவரை திமுக பிரமுகர் என சிலர் பதிவிட்டு ஆட்சிக்கு வரும்முன்னே இப்படியா என விமர்சித்திருந்தனர்.
காணொலிக் காட்சி வைரலானது, போலீஸாரை தரக்குறைவாக திட்டுகிறார் என செய்தி வெளியானது. இதையடுத்து பார்த்தால் அடையாளம் காட்டக்கூடியவர் என பதிவிட்டு அந்தப் பெண் பிரமுகர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெண் உதவி ஆய்வாளர் மணிமேகலை அளித்த புகாரின் கீழ் அண்ணாசாலை போலீஸார், அவதூறாகப் பேசுதல் (294(பி)), அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (353), மிரட்டல் (506(1)) ஆகியப்பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.