தமிழகம்

விசாரணையின்போது இளைஞர் மரணம் எதிரொலி: எஸ்பிளனேடு காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் - மேலும் 5 போலீஸாரிடம் விசாரணை

செய்திப்பிரிவு

காவல் நிலையத்தில் இளைஞர் மரணம் அடைந்தது தொடர்பாக எஸ்பிளனேடு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் குணசேகரனை பணி இடை நீக்கம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை எஸ்பிளனேட்டைச் சேர்ந்தவர் சபீர் பட்னவாலா (52). இவரது வீட்டில் 32 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக எஸ்பிளனேடு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

முதல் கட்டமாக பாரிமுனையில் உள்ள கடை ஒன்றில் பணி செய்து வந்த கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் (22), அவரது நண்பர்கள் மண்ணடி விக்னேஷ் (23), அஜித் (19) ஆகியோரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இந்நிலையில், ஜெயக்குமார் காவல் நிலையத்திலேயே உயிரிழந்தார்.

போலீஸார் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்ததாக அவரின் தாயார் வசந்தாமணி குற்றம்சாட்டினார். வலிப்பு நோயால்தான் ஜெயக்குமார் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாஜிஸ்திரேட் விசாரணையும் நடந்து வருகிறது.

இந்நிலையில், காவல் நிலையத்தில் போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த இளைஞர் மரணம் தொடர்பாக காவல் ஆணையர் மேற்பார்வையில் வட சென்னை காவல் கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன் விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து எஸ்பிளனேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் குணசேகரன் நேற்று முன்தினம் இரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம், தலைமைக் காவலர்கள் புகழேந்தி, விக்டர் அருள்தாஸ், லட்சுமி, காவலர் ரவி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT