தமிழகம்

ராமமோகன் ராவ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

வருமானவரித் துறை சோதனை தொடர்பாக சேகர் ரெட்டியின் கூட்டாளியை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கக் கோரி முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் கூட்டாளி சீனிவாசலு வீட்டில் வருமானவரித் துறையினர் கடந்த 2016 டிசம்பரில் சோதனை நடத்தினர். சீனிவாசலு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரான ராமமோகன் ராவ் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

அதன்படி அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாகவும், கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவும் வருமானவரித் துறை அவருக்கு நோட்டீஸ் பிறப்பித்தது.

இதற்கிடையே சீனிவாசலுவை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கக் கோரி ராமமோகன் ராவ் வருமானவரித் துறையிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் சீனிவாசலு பிறழ்சாட்சியம் அளித்துவிட்டதாகக் கூறி அவரது கோரிக்கையை ஏற்க வருமானவரித் துறை மறுத்துவிட்டது.

வருமானவரித் துறையின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், சீனிவாசலுவை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கவும் வருமானவரித் துறைக்கு உத்தரவிடக் கோரி ராமமோகன் ராவ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, சம்பந்தப்பட்ட சீனிவாசலுவை குறுக்கு விசாரணை செய்ய வேண்டுமென ராமமோகன் ராவ் உரிமை கோர முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT