தமிழகம்

காவல் நிலையத்தில் குற்ற ஆவண முறை பராமரிப்பில்லை: வரும் 23-ல் போலீஸாருக்கும் தேர்வு நடத்த கிரண்பேடி உத்தரவு

செ.ஞானபிரகாஷ்

மணல் கடத்தல் புகார் தொடர்பாக பாகூர் காவல் நிலையத்தில் கிரண்பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டபோது குற்ற ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால் வரும் 23-ல் ஆவணங்கள் பாதுகாப்பு முறை தொடர்பாக அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கும், அதற்கு மேல் காவல்துறையில் உள்ள அனைவருக்கும் தேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி அடுத்த பாகூரில் அதிக அளவில் மணல் கடத்தல் நடப்பதாக ஆளுநர் கிரண்பேடிக்கும், புதுச்சேரி அரசுக்கும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதுதொடர்பாக பாகூர் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முன் அறிவிப்பின்றி புதுச்சேரியை அடுத்த பாகூர் கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று ஆய்வு செய்தார்.

அப்போது,பாகூர் கிராமத்தில்  மணல் திருட்டு தொடர்ச்சியான நடப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததால் ஆய்வுக்கு வந்ததாக கூறிய கிரண்பேடி, தொடர்ச்சியாக  குற்றச்சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளின் விவரங்கள் தொடர்பான பதிவேடுகள் காவல் நிலையத்தில் இல்லாததால் கோபமடைந்தார். மேலும் காவல் நிலையம் தூய்மையாக இல்லை, கழிவறைகள் சரியாக பராமரிக்கவில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டினார்.

குற்றங்களைத் தடுக்க முதுகெலும்பாக இருக்கும் குற்றப் பதிவு அமைப்பு இந்த  காவல் நிலையத்தில் பின்பற்றப்படவில்லை என கோபத்துடன் பேசிய கிரண்பேடி, ஆவணங்களைப் பாதுகாக்கும் முறை அதன் விதிகள், போலீஸ் கையேடு குறித்து காவல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி வரும் 23-ல் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வை எஸ்.ஐ.கள், அதற்கு மேல் உள்ளோர் எழுத வேண்டும் என கூறினார். இரண்டு மணிநேரம் ஆளுநர் ஆய்வு நடத்தினார்.

SCROLL FOR NEXT