தமிழகம்

எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணியுடன் சுகாதாரத்துறைச் செயலர் சந்திப்பு: ரத்த வங்கிகளை சோதிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

கர்ப்பிணிக்கு எச்ஐவி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தை விசாரிப்பதற்காக, உயர்மட்ட தொழில் நுட்பக்குழு ஒன்று அமைக்கப்பட்டதோடு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  பாதிக்கப்பட்ட கர்ப்பிணியிடம் விசாரணை நடத்தினார்.

சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தமிழகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சுகாதாரத்துறை வரலாற்றில் கரும்புள்ளியாக பார்க்கப்படுகிறது. உடனடியாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விருதுநகருக்கு விரைந்தார்.அங்கு பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண்ணிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். அவரது கணவர் மற்றும் உறவினர்கள் நடந்த விவரங்களை தெரிவித்தனர்.

அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த அவர் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.அத்துடன் எச்ஐவி ரத்தம் வைக்கப்பட்டிருந்த சாத்தூர் ரத்த வங்கியையும் ராதாகிருஷ்ணன் ஆய்வு  நடத்த உள்ளார்.

இந்த விவகாரத்தை விசாரிப்பதற்காக, மதுரை ராஜாஜி மருத்துவமனையின் ரத்த வங்கி தலைவர் மருத்துவர் சிந்தா தலைமையில் உயர்மட்டதொழில்நுட்பக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மருத்துவர்கள் மற்றும் ரத்த வங்கி ஊழியர்களுடன் விசாரணை நடத்துவதுடன், விருதுநகர் மற்றும் சிவகாசியில் உள்ள ரத்த வங்கிகளில் ஆய்வு நடத்தவும் உள்ளனர்.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள ரத்த வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் ரத்தங்களை மறுபரிசோதனை செய்யவும் சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

SCROLL FOR NEXT