தமிழகம்

ஏழை, எளிய மாணவர்களின் பசியைப் போக்கும் சத்துணவு மையங்களுக்கு மூடு விழா: திருநாவுக்கரசர் கண்டனம்

செய்திப்பிரிவு

ஏழை, எளிய மாணவர்களின் பசியைப் போக்கும் சத்துணவு மையங்களுக்கு தமிழக அரசு மூடு விழா நடத்துவது கண்டிக்கத்தக்கது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருநாவுக்கரசர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரால் 1955-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டு, 1956 ஆம் ஆண்டு முதல் அரசு தொடக்கப் பள்ளியில் படித்த குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை 1982-ம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்ஜிஆர், சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தினார். இத்திட்டத்தால் இன்று 43 ஆயிரத்து 203 சத்துணவு மையங்கள், சத்துணவு அமைப்பாளர்கள், சமையல் உதவியாளர்கள் என 90 ஆயிரம் பேர் பணியாற்றி, நாள்தோறும் 52 லட்சம் பள்ளிக் குழந்தைகள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.

தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டத்திற்கு 1995 ஆம் ஆண்டு முதல் மத்திய காங்கிரஸ் அரசு மானியம் வழங்கியது.  60 சதவீதம் மத்திய அரசு நிதியும், மாநில அரசு 40 சதவீத நிதியும் ஒதுக்கப்பட்டு இத்திட்டம் செயல்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து தமிழக மக்களை புறக்கணிக்கின்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இதுவரை அளித்து வந்த 60 சதவீத நிதியை 40 சதவிதமாகக் குறைத்துள்ளது பெரும் கண்டனத்திற்குரியது.

மத்திய அரசு நிதி குறைத்துள்ளது எனும் காரணம் காட்டி  8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் நலனில் இந்த அரசு அக்கறை காட்டாத அரசாக செயல்படுகிறது என்பதையும், 8,000 சத்துணவு மையங்களை மூடுவதால், 24,000 சத்துணவு ஊழியர்கள் வாழ்வாதரம் பாதிக்கப்படும் என்பதையும் கருத்தில்  கொள்ளாத மாநில அதிமுக அரசு, இத்திட்டத்திற்கு மத்திய அரசிடம் நிதி கோர உரிய அழுத்தத்தைக் காட்டாமல், மாறாக 8,000 சத்துணவு மையங்களுக்கு மூடு விழா எடுக்க நினைக்கும் நிலை மாநில அதிமுகவின் கையாலாகத் தனத்தையே காட்டுகிறது.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைச் செயல்படுத்தாமல், கூடுதலாக கடைகளைத் திறக்க முயலும் அதிமுக அரசு ஏழை, எளிய மாணவர்களின் பசியை போக்கும் சத்துணவு மையங்களுக்கு மூடு விழா நடத்தும் போக்கு கண்டிக்கத்தக்கது.

31.5.2009க்கு முன்பு தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூபாய் 8,370 என்றும் அதற்கு அடுத்தநாள் 1.6.2009 ஆம் தேதிக்கு பின் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூபாய் 5,200 என்று நிர்ணயம் செய்யப்பட்டதால் ஒருநாள் முன்பாகவும், பின்பாகவும் பணியில் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,170 ஊதியத்தில் வேறுபாடு வருகிறது. 

எனவே, ஒரே கல்வித் தகுதி உள்ள ஆசிரியர்களுக்கு இருவிதமாக ஊதியம் வழங்காமல் ஓரே ஊதியம் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்திவரும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை தமிழக முதல்வர் அழைத்து பேசி சுமுகத் தீர்வு காண வேண்டும்.

இதுபோல் சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தினையும் மனதில் கொண்டு ஏழை, எளிய கல்விப் பயிலும் மாணவர்களின் நிலைப்பாட்டினையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT