தமிழகம்

நெல்லை அருகே 6 பேர் உயிரிழப்பு: 21 பேர் படுகாயம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி அருகே வேனும், 2 அரசுப் பேருந்துகளும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுநர் உட்பட 21 பேர் பலத்த காயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 15 பேர், வேனில் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். நேற்று காலை சுமார் 5.30 மணியளவில் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே வந்தபோது, வேனும், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்குச் சென்ற அரசுப் பேருந்தும் பக்கவாட்டில் உரசிக்கொண்டன. இதனால், கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது. சாலையின் மத்தியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி பேருந்து நின்றது.

அடுத்தடுத்து மோதல்

இந்நிலையில் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்றுகொண்டிருந்த மற்றொரு அரசுப் பேருந்து, விபத்து நடந்த பகுதியை கடந்து செல்ல முயன்றது. அப்போது, தடுப்புச் சுவரில் மோதி நின்ற பேருந்தை அதன் ஓட்டுநர் பின்னோக்கி இயக்கவே, அதன் மீது சென்னையில் இருந்து வந்த பேருந்து மோதியது. பின்னர் வேன் மீதும் மோதியது. இதில் 2 பேருந்துகளும் பலத்த சேதம் அடைந்தன. வேனும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், பேருந்துகளில் பயணித்த திருச்சி துறையூரைச் சேர்ந்த அம்ஜத்குமார், பரமக்குடி அருகே முதலூரைச் சேர்ந்த பாஸ்கர்(34) மற்றும் முருகன், பிரவீன் ஜீவா ரூபி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேனில் இருந்த காரைக்குடியைச் சேர்ந்த காளியப்பன், செல்வராஜ், அனந்தகிருஷ்ணன், பிரபாலெட்சுமி, சேகர் மனைவி செல்வி, வெங்கடாசலம் மனைவி செல்வி, கனகவல்லி, சேகர் ஆகிய 8 பேர் பலத்த காயமடைந்தனர்.

கங்கைகொண்டான் போலீஸாரும், தீயணைப்புப் படையினரும், பேருந்துகளில் பலத்த காயங்களுடன் இருந்த பயணிகள் 23 பேரை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருநெல் வேலி மாவட்டம் பாளையஞ்செட்டிகுளத்தைச் சேர்ந்த தவசி முத்து(47), மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த பிரதீப்(26) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

SCROLL FOR NEXT