கல்லீரல் நோய்கள் குறித்து ஆராய்ச்சி செய்த சென்னை அரசு பொது மருத்துவமனை கல்லீரல் மற்றும் பித்தயியல் துறை இயக்குநர் டாக்டர் கே.நாராயணசாமிக்கு தமிழக அறிவியல் அறிஞர் விருதை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்.
சென்னை அரசு பொது மருத்துவமனை கல்லீரல் மற்றும் பித்தயியல் துறை இயக்குநராக இருப்பவர் டாக்டர் கே.நாராயணசாமி. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கல்லீரல் நோய்கள் பற்றியும், குறிப்பாக கொழுப்பு சார்ந்த கல்லீரல் நோய் குறித்து பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
இதற்காக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் மூலம் தமிழக அறிவியல் அறிஞர் விருதுக்கு டாக்டர் கே.நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி டாக்டர் கே.நாராயணசாமிக்கு தமிழக அறிவியல் அறிஞர் விருது வழங்கி ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை, பட்டயம் மற்றும் சான்றிதழை வழங்கினார். இவருடன் சேர்த்து மொத்தம் 29 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர்கல்வித் துறைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் இரா.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக டாக்டர் கே.நாராயணசாமியிடம் கேட்ட போது, “கல்லீரல் நோய் கள் குறித்த ஆராய்ச்சியின் மூலம் கல்லீரல் பாதிப்பை எப் படி கண்டுபிடிப்பது, கல்லீரல் நோய் வராமல் தடுப்பது, கல்லீரல் நோய்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது போன்றவை சாத்தியமாகும்” என்றார்.