தமிழகம்

கர்ப்பிணிப் பெண்ணுக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தனி அறையில் உயர் சிகிச்சை: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி

செய்திப்பிரிவு

எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தனி அறையில் உயர் சிகிச்சை அளிக்கப்படும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

விருதுநகர் சென்ற சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை சந்தித்த பின் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறியதாவது:

''எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் வேலைவாய்ப்புக்கு தனியார் லேப்பில் ரத்தத்தைச் சோதித்தபோது நோய்த்தொற்று உள்ளது தெரியவந்தது. அவரது ரத்தத்தை சோதித்த லேப் டெக்னீஷ்யன் அவராகவே முன்வந்து இதைப்பற்றி சொல்லி அதன் பின்னர் ரத்தம் கொடுத்தவர், ஏற்றப்பட்டவர் இருவர் ரத்தத்தையும் சோதித்தபோது அது பாசிட்டிவ் என வருகிறது.

இந்த இடத்தில் பின்னடைவு என்னவென்றால் லேப் டெக்னீஷியன் அவரது நோய்த்தொற்றை சோதிக்கும்போது எச்.ஐ.வி இல்லை என்று கூறியுள்ளது தெரியவருகிறது. அதில் சோதனையில் பின்னடைவு உள்ளது. இவை எல்லாவற்றையும் மருத்துவ ரீதியாக நிபுணர்களை வைத்து டெக்னிக்கல் பின்னடைவைப் பற்றிச் சொல்கிறோம்.

தரச்சான்று என்று ஒன்று உள்ளது. அதை நிபுணர்கள்தான் செய்கிறார்கள். இதுவரை இதுமாதிரி சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததில்லை. கேரளாவில் ஒரு ஒன்பது வயது சிறுமிக்கு நடந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இதுதான் முதல்முறை. நடக்கக்கூடாது. இதை நாங்கள் மிகவும் மோசமான விஷயமாகத்தான் பார்க்கிறோம். அதற்கான நடவடிக்கையை கட்டாயம் எடுப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ராதாகிருஷ்ணன்  பதிலளித்தார்.

உயர்தர சிகிச்சை அந்தப் பெண்ணுக்கு எப்படி கொடுக்கப்போகிறீர்கள்?

எச்.ஐ.வி.க்காக மருந்து கொடுக்கிறோம் அல்லவா, அது அரசு மூலமாகத்தான் அனைவருக்கும் கொடுக்கிறோம். அந்த அடிப்படையில் இவருக்கு கொடுக்க உள்ளோம். ஆனால் அந்தப் பெண் விருதுநகரில் சிகிச்சை எடுக்க விரும்பவில்லை. அதை வற்புறுத்தாமல் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தனி அறை ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க உள்ளோம்.

அவர்கள் கேட்டது தனியார் மருத்துவமனை, ஆனால் எங்கு போனாலும் அதே சிகிச்சைதான் கொடுக்கப்படும். அதையே மதுரை அரசு மருத்துவமனையில் அளிக்க உள்ளோம். வெளிநாட்டுக்குச் சென்றாலும் அதே அளவு சிகிச்சைதான் அளிக்கப்படும். ஆகவே அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

குழந்தைப் பிறப்பைப் பொறுத்தவரை அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். ஆனால் அவர்கள் குடும்பத்தினர் எண்ணத்துக்கு, எதிர்பார்ப்புக்கு இணங்க இந்த சிகிச்சைகள் அளிக்கப்படும். அவர்களுக்கு அடுத்தடுத்த வரும் வாரங்களில் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பிடிக்கவில்லை என்றால், அவர்கள் வேறு மருத்துவமனை கேட்டால் அவர்கள் விருப்பப்படி அவர்களோடு எங்கள் குழுவும் இணைந்து சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

குழந்தைப் பிறப்புக்குப் பின் அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு நாட்கள் சிகிச்சை அளிப்பீர்கள்?

அது எச்.ஐ.வி பாதிப்பு தற்காலிக சிகிச்சையில் அவர்களுக்கு உடல் பாதிப்புகள் வரும். ஆனால் தொற்று ஏற்பட்டவுடன் அது வராது. சர்க்கரை நோய் போன்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். தொடர்ந்து அவரது உடல் நிலை கண்காணிக்கப்படும். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்புடன் அவர் மருந்துகள் எடுத்துவர வேண்டும், அவரது நியூட்ரீஷியன் சப்போர்ட்டும் எடுக்கப்பட்டு சோதிக்கப்படும்.

மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதை அவருக்கு வழங்குவோம். தொடர்ந்து கண்காணித்து வருவோம்.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  

SCROLL FOR NEXT