தமிழகம்

அதிமுக - அமமுகவினர் மோதல்: தினகரன் ஆதரவாளர் கார் எரிப்பு

செய்திப்பிரிவு

சென்னை சாலிகிராமம் அருணா சலம் சாலையைச் சேர்ந்தவர் குண சீலன் (36). அம்மா மக்கள் முன் னேற்ற கழகத்தில் விருகம்பாக்கம் பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். கேபிள் தொழிலும் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது காரை தசரதபுரம் 2-வது தெருவில் உள்ள கேபிள் டிவி அலுவலகம் எதிரே நிறுத்தி இருந்தார்.

நேற்று அதிகாலையில் கார் கண்ணாடியை உடைக்கும் சத்தம் கேட்டது. அங்கிருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத 5 பேர் கண்ணாடியை உடைத்துவிட்டு காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

இதைப் பார்த்து குணசீலன் ஆதரவாளர்கள் சத்தம் போட்டதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அங்கிருந்தவர்கள் தண்ணீர், மணலை கொட்டி தீயை அணைத்தனர். தீயில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது.

இதுகுறித்து குணசீலன் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எம்ஜிஆர் நகரில் அதிமுக சார் பில் வைக்கப்பட்டிருந்த பேனரை நேற்று முன்தினம் இரவு குண சீலன் ஆதரவாளர்கள் கிழித்து விட்டதாகவும் அந்தக் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமரா வில் பதிவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக குணசீலனின் காருக்கு தீ வைக் கப்பட்டதா அல்லது முன் விரோதம் காரணமா என விசாரணை நடந்து வருகிறது.

காவல் நிலையத்தில் குணசீலன் புகார் அளித்தபோது அங்கு அதிமுக , அமமுக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். திடீரென இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதைத் தொடர்ந்து அவர்களை போலீஸார் விரட்டிவிட்டனர். இந்த மோதலில் ஒருவர் காயம் அடைந்தார்.

SCROLL FOR NEXT