மடிப்பாக்கத்தில் தனியார் செல்போன் நிறுவன ஊழியர் திருமணமாகி 10 மாதத்தில் 4 மாத கர்ப்பிணியான இளம் மனைவியுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
மடிப்பாக்கம் பாலையா கார்டன் பாரதி தெருவைச் சேர்ந்தவர் சாரதி (32). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் ஏரியா மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன் பிரசாந்தி (21) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பிரசாந்தி ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர்.
சாரதியின் சகோதரர், சகோதரிகள் தனியாக வசிக்கின்றனர். திருமண வாழ்க்கை சந்தோஷமாகச் சென்ற நிலையில் பிரசாந்தி கர்ப்பமடைந்தார். தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் சாரதியின் தாயார் காலமானார்.
தாயார் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த சாரதி இதனால் மிகுந்த சோகத்தில் இருந்தார். அருகில் உறவினர்கள் இருந்து ஆறுதல் கூற இயலாத நிலையில் மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் கோவிலம்பாக்கத்தில் வசிக்கும் சாரதியின் சகோதரர் நேற்று சாரதிக்கு போன் செய்துள்ளார்.
நெடுநேரம் போன் ரிங் சென்றும் எடுக்கவில்லை, பிரசாந்திக்கு போன் செய்தும் அவரும் எடுக்காததால் இன்று காலை நேராக வீட்டுக்கு வந்துள்ளார். கதவை நெடுநேரம் தட்டியுள்ளார். அக்கம்பக்கத்தினர் வந்து என்னவென்று விசாரித்து அவர்களும் கதவைத் தட்டியுள்ளனர்.
கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்துக்கொண்டு திறந்து பார்த்தபோது பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. மின்விசிறியில் சாரதியும், பிரசாந்தியும் தூக்கிட்ட நிலையில் பிணமாகத் தொங்கியுள்ளனர். உடனடியாக இது குறித்து மடிப்பாக்கம் போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் அளிக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பிணங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்துகொண்ட சாரதி, பிரசாந்தி இருவரும் தற்கொலைக்கு முன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளனர். அதில் தங்கள் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தாயார் இறந்த மன உளைச்சலே தற்கொலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மரணம் எல்லோருக்கும் உண்டு. வாழும் வாழ்க்கையில் இடர்களை எதிர்கொள்ளவேண்டும் என்கிற பாடத்தை சாரதிக்கு சொல்லித்தர நண்பர்களோ, உறவுகளோ இல்லாத நிலையில் அநியாயமாக தம்பதி உயிரை இழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.