உளுந்தூர்பேட்டை அருகே பால் குளிரூட்டும் மையத்தை ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்பு ஆய்வாளரை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினர் என்ற பெயரில் மிரட்டிய அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக பொருளாளரும், ஆவின் பால் கலப்பட வழக்கில் தொடர்புடையவருமான வைத்தியநாதன், உளுந்தூர்பேட்டையை அடுத்த பரிக்கலில் பால் குளிரூட்டும் மையம் நடத்தி வருகிறார். இந்த மையம் அனுமதியின்றி இயங்குவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் உளுந்தூர்பேட்டை உணவுப் பாதுகாப்பு ஆய்வாளர் கதிரவன் இரு தினங்களுக்கு முன், குளிரூட்டும் மையத்திற்குச் சென்று ஆய்வு நடத்தி, நோட்டீஸ் விநியோகித்ததாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த வைத்தியநாதன், செல்போன் மூலம், கதிரவனைத் தொடர்புகொண்டு, எப்படி எங்கள் மையத்தில் ஆய்வு செய்யலாம் என்ற கேள்விக் கணைகளோடு, தரக்குறைவாக பேசி, மிரட்டல் விடுத்துள்ளார். அவரைத் தொடர்ந்து அவரது சகோதரரும், தென்சென்னை மாவட்ட அதிமுக நிர்வாகியுமான மகேஷூம், தரக்குறைவாகப் பேசியதோடு, அமைச்சர் சி.வி.சண்முகம் எனது பெரியப்பா மகன் தான் எனக் கூறி மிரட்டியுள்ளார். இருவரும் கதிரவனுடன் பேசிய ஆடியோ பதிவுசெய்யப்பட்டு வாட்ஸ் அப் மூலமாக நேற்று முன்தினம் முதல் வைரலாகப் பரவி வருகிறது.
இதையடுத்து கதிரவன், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம், முறையிட்டதன் பேரில், அவரது உத்தரவின் அடிப்படையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கதிரவன் புகார் செய்துள்ளார். இருப்பினும் பால் குளிரூட்டும் பகுதியைச் சேர்ந்த திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி, காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் கதிரவன். இதையடுத்து வைத்தியநாதன் மற்றும் மகேஷ் ஆகிய இருவரும் மீதும், கொலை மிரட்டல், அரசு அலுவலரை மிரட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்
இதனிடையே இன்று (திங்கள்கிழமை) விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகத்திடம், வாட்ஸ் அப் ஒலிப்பதிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த சண்முகம், ''அரசு அதிகாரிகள், அலுவலர்களை யார் மிரட்டினாலும், தரக்குறைவாகப் பேசினாலும் தவறுதான், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.