பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும், தமிழகம் முழுதும் உள்ள ரத்த வங்கிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த மாதம் பரிசோதனைக்காகச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணிப் பெண்ணை சோதித்த அரசு மருத்துவர்கள் அவருக்கு ரத்தக் குறைபாடு உள்ளதாக கண்டறித்துள்ளனர்.
அவருக்கு ரத்தம் ஏற்றுவதற்காக சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து ரத்தத்தை பெற்று அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. சில நாட்கள் கழித்து அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடல் நிலையில் திடீரென பாதிப்பு ஏற்பட்டதால் அந்த கர்ப்பிணிப் பெண் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார்.
அப்போது அவரை பரிசோதித்த மட்ருத்துவர்கள் திடுக்கிட்டுப் போயினர். அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு கடந்த மாதம் ரத்தம் ஏற்றபட்டதால் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாகத் தெரியவந்தது.
சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அங்குள்ள அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்த தானம் வழங்கியதும், அவரது ரத்தத்தைப் பரிசோதிக்காமல் அதை சேமித்து வைத்து அதை கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றியதும் தெரியவந்தது.
இந்த விவகாரம் பெரிதாக வெடித்து தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
''ரத்த வங்கியில் அலட்சியமாகச் செயல்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் சார்பில் வருத்தமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக்னாலஜியைக் கொண்டு அந்த எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட பெண்ணின் உடலில் முழுமையான அளவில் தாக்கம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற விவகாரம் இனி நடக்காமல் இருக்க தமிழகத்தில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளையும் ஆராய்ந்து எச்.ஐ.வி தொற்று இல்லா ரத்தம் என்கிற அளவில் அறிக்கை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது''.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.