கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்ட எச்ஐவி ரத்தத்தை தானமாக வழங்கிய கமுதி இளைஞர், சவுதி அரேபியா செல்வதற்காக விசா பெற்று அதற்கான மருத்துவப் பரிசோதனைக்கு சென்றபோதே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் தமிழக சுகாதாரத் துறை விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. எச்ஐவியால் பாதிக்கப்பட்ட அந்த இளைஞர், தான் தானம் செய்த ரத்தம் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டதை வெளியே சொன்னதாலே இந்த சம்பவம், வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்த இளைஞரின் மனிதாபிமானத்தால் கர்ப்பிணிக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படுகிறது. அவரது குழந்தைக்கும், எச்ஐவி பரவாமல் தடுக்க தமிழ்நாடு சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அவரது கணவருக்கும் எச்ஐவி பரிசோதனை செய்து, அவருக்கு இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அந்த இளைஞர் 3 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
எச்ஐவி பாதித்த தன்னோட ரத்தத்தை, கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்ததாலே அந்த இளைஞர் தற்கொலை முடிவு வரை சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த இளைஞருக்கும், மதுரை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து சிகிச்சை வழங்கப்படுகிறது. அவருக்கு விஷத்தை முறிக்கும் மருத்துவ சிகிச்சையும், எச்ஐவியை கட்டுப்படுத்துவதற்கான ஏஆர்டி கூட்டு மருந்து சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
அந்த இளைஞர் சிகிச்சை பெறும் வார்டு அருகே அவரது தந்தை, தாய், உறவினர்கள் சோகமாக நின்றிருந்தனர். அவர்களிடம் பேசியபோது விக்கி விக்கி அழத் தொடங்கினர்.
சிவகாசியைச் சேர்ந்த இளைஞர் பெரியப்பா சுந்தரம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறியதாவது:
சின்ன வயசுல இருந்தே முனியசாமி (பெயர் மாற்றப் பட்டுள்ளது)என் வீட்டில்தான் வளர்ந்தான். சரியாகப் படிக்கல. அதனால, சிவகாசி பட்டாசு கம்பெனியில் வேலைக்குச் சேர்த்துவிட்டோம். அவனுக்கு அந்த வேலையில பிடித்தம் இல்ல. சில மாதமாவே வெளிநாடு செல்ல முயற்சி செய்தான். சவுதி அரேபியாவுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. தற்போது விசாவும் வாங்கிவிட்டோன்.
இந்த சூழலில்தான், 30-ம் தேதி என் கர்ப்பிணி மருமகளை (இவரும் கர்பிணிதான்) ரத்தச் சோகைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அப்போது அவருக்கு ரத்தம் தேவைப்பட்டது. அதற்கு எங்கள் குடும்பத்தில் யாரையாவது ரத்தம் கொடுக்கச் சொன்னார்கள். இவன் முதல் ஆளாக சென்று ரத்தம் கொடுத்தான்.
எச்ஐவி இருந்திருந்தால் அப்போதே சொல்லியி ருப்பாங்களே. ஆனால், எல்லாம் சரியாக இருந்தது என்றார்கள். நாங்களும் மருமகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டோம். இவனும், வெளிநாடு செல்வதற்கான ஏற்பாட்டில் இருந்தான்.
அதற்காகத்தான், கடந்த 24-ம் தேதி மதுரையில் மருத்துவப் பரிசோதனைக்கு சென்றான். அங்குதான், அவனுக்கு எச்ஐவி இருப்பது தெரியவந்தது. உடனே, எங்களிடம் கூட சொல்லாமல் ரத்த தானம் செய்த சிவகாசி மருத்துவமனைக்குச் சென்று சொன்னான். 18 வயது பையன். எந்த தப்பும், தவறும் செய்யாதவன். அவனுக்கு இந்த நோய் எப்படி வந்ததுன்னு தெரியல.
இவ்வாறு அவர் கூறினார்.