தந்தை மீது அதீத பாசம் வைத்திருந்த மகள் அவர் மரணமடைந்த செய்திக்கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்தார்.
ராசிபுரம் அருகே கூனவேலம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிராமன் (62). இவருக்கு அம்பாயி (35) என்று ஒரே மகள் இருந்தார். மகள் மீது தந்தைக்கும், தந்தை மீது மகளுக்கும் அதீத பாசம் உண்டு.
மகளுக்காக நல்ல இடத்தில் பார்த்து திருமணம் செய்து கொடுத்தார். ஆனால் சில ஆண்டுகளில் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தாய் வீட்டுக்கே அம்பாயி திரும்பிவிட்டார். தந்தைக்கு யாரும் துணை இல்லாததால் மறுமணம் செய்யாமல் தந்தைக்குப் பணிவிடை ஆற்றுவதிலேயே காலத்தை கழித்துவிட்டார்.
இப்படியே கடந்த 15 ஆண்டுகள் ஓடிய நிலையில் சிறுநீரகப் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த துளசிராமனுக்கு சமீப காலமாக நோயின் தாக்கம் அதிகரித்து கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று திடீரென உயிரிழந்தார்.
தந்தை மரணமடைந்த செய்தி கேட்ட அம்பாயி இடிந்து போனார். பலரும் அவரைத் தேற்றினர். ஆனாலும் அதிர்ச்சியில் இருந்தார். இந்நிலையில் துளசிராமன் உடல் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு கிடத்தப்பட்ட தந்தையின் உடலைப் பார்த்த மகள் அம்பாயி அப்படியே மயங்கி தந்தையின் உயிரற்ற உடல் மீது சரிந்தார்.
அனைவரும் அவர் மயக்கமாகி விட்டதாக முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்ப முயல, அம்பாயி கண்விழிக்காமலே கிடந்ததைப் பார்த்து மருத்துவரை அழைத்து வந்து பரிசோதித்தபோது அவரும் உயிரிழந்தது தெரியவந்தது. தந்தையின் மறைவை எண்ணி அதிர்ச்சியில் இருந்த அம்பாயி அவரது உடலைப் பார்த்ததும் அதிர்ச்சியால் உயிரை விட்டுவிட்டார்.
அவரது மறைவு உறவினர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கிய நிலையில் உறவினர்கள் தந்தைக்கும், மகளுக்கும் ஒரே நேரத்தில் ஈமச்சடங்கு செய்தனர்.