சென்னையில் குற்றங்களைத் தடுக்க, புதிதாக மேலும் 446 கண்காணிப்பு கேமராக்கள் போக்கு வரத்து காவல்துறை சார்பில் நிறுவப்பட்டுள்ளன.
சென்னையில் குற்றங்களை கட்டுப்படுத்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறார். அதன் ஒரு பகுதியாக ‘மூன்றாவது கண்’ என்ற பெயரில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த விழிப்புணர்வு செய்து வருகிறார்.
கண்காணிப்பு கேமரா பொருத்துவதன் ஒரு பகுதியாக போக்குவரத்து காவல்துறை சார்பில் கதிட்ரல் சாலை, ஆர்.கே.சாலை, டிடிகே சாலை, எல்டாம்ஸ் சாலை, கஸ்தூரி ரங்கன் சாலை, சேமியர்ஸ் சாலை மற்றும் செனடாப் சாலை ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 446 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை சென்னை அண்ணா மேம்பாலம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று காலை தொடங்கி வைத்தார்.
50 மீட்டர் இடைவெளியில்
அப்போது அவர் பேசும்போது, “குற்றங்களை குறைக்க சென்னை யில் 50 மீட்டர் இடைவெளியில் ஒரு கண்காணிப்பு கேமரா என்ற அடிப்படையில் பொருத்த நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து காவல்துறை சார் பில் சென்னை முழுவதும் 335 சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
சென்னை முழுவதும் இது வரையில் 1 லட்சத்து 50 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. விரைவில் இந்த எண்ணிக்கையை 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கண்காணிப்பு கேமரா வளை யத்துக்குள் சென்னையை கொண்டு வர முடியும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் அருண், இணை ஆணையர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.