தமிழகம்

பத்திரிகையாளர்களை சட்டவிரோத காவலில் விசாரித்தது தவறு: விசாரணைக்கு டிஜிபி உத்தரவிட ‘இந்து’ என்.ராம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

பத்திரிகையாளர்களை 2 நாள் சட்டவிரோத காவலில் வைத்தது பற்றி விசாரிக்க டிஜிபி உத்தரவிட வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளரும் ‘தி இந்து’ குழுமத்தின் தலைவருமான என்.ராம் வலியுறுத்தியுள்ளார்.

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரிய வகை மணல் நிறுவனம் (ஐஆர்இஎல்) செயல்பட்டு வருகிறது. கடந்த 26-ம் தேதி ஜூல் ஜிருடா, ஆர்த்யூர் புவா என்ற 2 பிரான்ஸ் பத்திரிகையாளர்கள், இந்த ஆலையின் தடை செய்யப்பட்ட பகுதியில் வீடியோ எடுத்ததாக கூறி வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு அவர்கள் தங்கள் நாட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர்.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், பிரான்ஸ் பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்றதாக சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் டி.ஆனந்தகுமார், எம்.ஸ்ரீராம் ஆகியோரை கன்னியாகுமரிக்கு வரவழைத்து 2 நாள் விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தி யாளர்களிடம் ‘இந்து’ என்.ராம் நேற்று கூறியதாவது:

நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் தமிழ் பத்திரிகையாளர்கள் 2 பேரை கன்னியாகுமரி போலீஸார் சட்டவிரோத காவலில் வைத்து துன்புறுத்தியதை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தப் பிரச்சினையில் கன்னியாகுமரி போலீஸார் பொய்யான தகவல்களை வெளியிடுவதையும் கண்டிக்கிறோம் .

சென்னையைச் சேர்ந்த டி.ஆனந்தகுமார், எம்.ஸ்ரீராம் ஆகிய 2 பத்திரிகையாளர்கள், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 புலனாய்வு செய்தியாளர்களுடன் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்குச் சென் றுள்ளனர். ஜூல் ஜிருடா, ஆர்த்யூர் புவா என்ற 2 பிரான்ஸ் பத்திரிகையாளர்களும் சட்டவிரோத தாது மணல் கொள்ளை பற்றி எழுதும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்து விசாரித்து எழுதி வருபவர்கள். அவர்களுக்கு சென்னை பத்திரிகையாளர்கள் தொழில் முறையாகவே உதவியுள்ளனர்.

நவம்பர் 26-ம் தேதி காலை மணவாளக்குறிச்சியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான அரிய வகை மணல் ஆலையின் அதிகாரி ஒருவரை பாதிரியார் கில்டாஸ் என்பவருடன் சென்று பிரான்ஸ் பத்திரிகையாளர்கள் சந்தித்துள்ளனர். அங்குள்ள பாதுகாப்பு மேலாளர் அளித்த புகாரின் பேரில் 2 பிரான்ஸ் பத்திரிகை யாளர்கள் மீதும், அவர்களை அழைத்துச் சென்ற பாதிரியார் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முதல் தகவல் அறிக்கையில் பிரான்ஸ் பத்திரிகையாளர்களின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் அந்தப் பகுதிக்கு செல்வது குறித்தோ, படம் எடுத்தது குறித்தோ தங்களுக்குத் தெரியாது என ஆனந்தும், ஸ்ரீராமும் கூறியுள்ளனர்.

அந்த நேரத்தில் அவர்கள் இருவரும் ஹோட்டல் அறையில் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. பாதிரியார் கூறிய பிறகுதான் இவர்களுக்கு தகவல் தெரிய வந்தது. பிரான்ஸ் பத்திரிகையாளர்கள் இருவரும் திருவனந்தபுரம், மும்பை வழியாக தங்கள் நாட்டுக்கு சென்றுவிட்டனர். ஆனந்தும் ஸ்ரீராமும் 27-ம் தேதி காலை சென்னை திரும்பியுள்ளனர்.

செல்போன்கள் பறிமுதல்

இந்நிலையில், கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன், 27-ம் தேதி ஆனந்தையும் ஸ்ரீராமையும் தொடர்புகொண்டு, கன்னியாகுமரி வந்து என்ன நடந்தது என்பதை கூறிவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி, அவர்கள் இருவரும் 28-ம் தேதி காலை 11 மணிக்கு கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் பாஸ்கரனை அவரது அலுவலகத்தில் சந்தித்துள்ளனர். இருவரிட மும் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றும் விசாரணை செய்துள்ளனர்.

இந்த சட்டவிரோத காவல் பற்றி வழக்கறிஞர்களும், பத்திரிகையாளர்களும் கேள்வி எழுப்பிய பிறகே அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

சட்டவிரோத காவல் என்பது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிரானது. பத்திரிகையாளர்களை சட்டவிரோத காவலில் வைத்தது குறித்து விசாரிக்க டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட வேண்டும். பத்திரிகை சுதந்திரத்தை முழுமையாக பாதுகாப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பிரான்ஸ் நாட்டின் உளவாளிகள் கடல் வழியாக வந்தார்கள் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பொய்யான செய்தியை பரப்புகிறார். அவர் கூறிய தகவலுக்கும் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கைக்கும் தொடர்பு இல்லை.

இவ்வாறு ‘இந்து’ என்.ராம் கூறினார்.

பேட்டியின்போது, ஊடக சுதந்திரத் துக்கான கூட்டணியின் ஒருங்கிணைப் பாளர் பீர் முகமது, கூட்டணியின் முன்னணி உறுப்பினர் சசிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.சட்டவிரோத காவல் என்பது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிரானது. பத்திரிகை சுதந்திரத்தை முழுமையாக பாதுகாப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT