தமிழகத்தில் இருந்து திமுக ஆதரவுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மாநிலங் களவை எம்பி.யாக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி முயற்சி எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். பொருளாதார நிபுணரான அவர், ரிசர்வ் வங்கி கவர்னராகவும், 1991 முதல் 1996 வரை மத்திய நிதியமைச்சராகவும் இருந்தார். 1991 முதல் மாநிலங்களவை உறுப் பினராக இருந்தார். 1999 மக்க ளவைத் தேர்தலில் டெல்லி தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பிறகு மக்க ளவைத் தேர்தலில் அவர் போட்டி யிடவில்லை.
கடைசியாக கடந்த 2013 ஜூன் 15-ம் தேதி அசாம் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக் கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2019 ஜூன் 14-ம் தேதியுடன் முடிகிறது. ஜூன் மாதம் அசாமில் 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாகிறது. ஆனால், அங்கு காங்கிரஸுக்கு 25 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளதால் மன்மோகன் சிங் வெல்வாரா என்பதை உறுதியாக கூறமுடியாது.
எனவே, வேறு மாநிலங்களில் இருந்து அவரை எம்பி.யாக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி முயற்சி மேற் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கனிமொழி (திமுக), கே.ஆர்.அர்ஜுனன், ஆர்.லட்சு மணன், வி.மைத்ரேயன், டி.ரத்ன வேல் (அதிமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகிய 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 2019 ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது.
தமிழகத்தில் திமுகவுக்கு 88, காங்கிரஸுக்கு 8, முஸ்லிம் லீக் 1 என திமுக கூட்டணிக்கு 97 எம்எல் ஏக்கள் உள்ளனர். 20 தொகுதிகள் காலியாக உள்ளதாலும், ஆளும் அதிமுகவில் பலர் டிடிவி தினகரனை ஆதரிப்பதாலும் திமுகவுக்கு 3 எம்பி.க்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது.
இந்த வாய்ப்பை விட்டால், 2020 ஏப்ரலில்தான் 55 மாநிலங்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. எனவே, தமிழகத்தில் இருந்து திமுக ஆதரவுடன் மன் மோகன் சிங்கை மாநிலங்களவை எம்பி.யாக்க சோனியா முயற் சித்து வருவதாகவும், இதுதொடர் பாக திமுக தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி ஆகியோரு டன் அவர் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக முக்கிய தலைவர் ஒருவர் கூறியதாவது:
மன்மோகன் சிங் மாநிலங் களவை உறுப்பினராக நீடிக்க வேண்டும் என்பதில் சோனியா உறுதியாக உள்ளார். 2019 ஜூன் - ஜூலையில் அசாம், தமிழகம் என 8 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் வரவுள்ளது. அப்போது மக்களவைத் தேர்தல் முடிந்து, மத்தியில் என்ன மாற்றம் வேண்டு மானாலும் வரலாம்.
5 மாநில பேரவைத் தேர்தல் முடிவுகள் வரும் 11-ம் தேதி வெளியாகின்றன. புதிய ஆட்சி அமையும்போது, மாநிலங்களவை உறுப்பினராக உள்ள யாராவது முதல்வர், அமைச்சராகவும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் அவர்கள் ராஜினாமா செய்யும் இடத்துக்கு மன்மோகன் சிங் தேர்வு செய்யப்படலாம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மற்ற கட்சிகள் ஆதரவுடன் அசாமில் இருந்தே அவர் எம்பி.யாக்கப்படலாம். வேறு வழியே இல்லாத நிலையில் தமிழகத்தில் இருந்து திமுக சார்பில் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்படலாம். சோனியா, ராகுல் கேட்டால், ஸ்டாலின் மறுக்க மாட்டார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.