தமிழகம்

அழுகிய மரம், செடி, கொடிகள்... செத்து மிதக்கும் மீன்கள், மாடுகள்...: நாகை, திருவாரூரில் நாற்றமெடுக்கும் நீர்நிலைகள் - நோய் பரவாமல் தடுக்க அவசர நடவடிக்கை அவசியம்

செய்திப்பிரிவு

புயலால் பாதிக்கப்பட்ட மரங்கள், செடி, கொடிகள் அழுகிப்போய் கடந்த 2 வாரங் களாக கிடப்பதால், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல நீர்நிலைகளில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கடல் மற்றும் கடலோ ரப் பகுதிகளில் மாடுகள், மீன்கள் செத்து மிதப்பதால் சுகாதாரக் கேடு அதிகரித் துள்ளது. இதனால், மக்கள் நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கஜா புயலால் 1 கோடிக்கும் மேற்பட்ட மரங்கள் நாசமாகியுள்ளன. சிறிய அளவிலான செடிகள், கொடிகள் அதிக அளவில் அழிந்துள்ளன. குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மரங்கள் விழுந்து கிடக்கின்றன. 10 நாட்களுக்கு மேலாக நீரில் கிடந்ததால், தாவரக் கழிவுகள் அழுகிவிட்டன. இதனால், பல இடங்களில் தண்ணீரின் நிறமே கருப்பாக மாறிவிட்டது.

நீரின் தட்பவெப்ப நிலையில் ஏற்பட்ட மாற்றம், நீருக்குள் புதிய வாயுக்கள் உருவானது போன்ற காரணங்களால் மீன்கள், தவளைகள் உள்ளிட்ட உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. இப்பகுதிகளில் வளர்ப்பு மீன் குளம் வைத்திருந்த பலருக்கு இதனால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நீர்நிலைகளில் துர்நாற்றம் வீசுகிறது. இந்த மாசடைந்த நீரைத்தான் கால்நடைகளும் குடிக்கின்றன.

இதேபோல, கடலோரப் பகுதிகளிலும் அதிக அளவில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. வேதாரண்யம், சிறுதலைக் காடு கிராமத்துக்கு தெற்கே கடல் பகுதி யில் சிறு தீவுகள் உள்ளன. பச்சை தீவு, மன்னாவரம் தீவு போன்ற தீவுகளில் மேய்ச் சல் நிலம் அதிகம். தீவனப் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில், இங்கு கடலோர கிராமங்களில் வசிப்பவர்கள் தங்கள் ஆடு, மாடுகளைப் படகில் ஏற்றிச் சென்று, இந்த தீவுகளில் விட்டுவிட்டு வருவார்கள். நான் கைந்து மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் தீவுக்கு சென்று தங்கள் ஆடு, மாடுகளைத் தேடிக் கண்டுபிடித்து, வீட்டுக்கு கொண்டு வருவார்கள். தனியாக தீவுக்குச் செல்லும் பல பசுக்கள், எருமைகள் திரும்பும்போது கன்றுகளோடு வருவது சகஜம் என்கின்றனர் அப்பகுதி கிராம மக்கள்.

வழக்கம்போல, இந்த மாத தொடக் கத்தில் மன்னாவரம் தீவில் 1,000-க்கும் மேற்பட்ட மாடுகள் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கஜா புயலில் சிக்கி, இதில் பெரும்பாலான ஆடு, மாடுகள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து செல்வம் என்ற மீனவர் கூறும்போது, ‘‘எங்க கிராமத்திலேர்ந்து மட்டும் 30 மாடு, 100 ஆடுகள மன்னாவரம் தீவில் விட்டிருந்தோம். புயல் அடிச்ச பிறகு தீவுக்கு போனப்ப நிறைய மாடு செத்துக் கிடந்தது. கிட்டபோக முடியாத அளவுக்கு நாற்றம் அடிச்சுது. அதனால திரும்பி வந்துட்டோம்’’ என்றார்.

புயல் வீசியபோது பீதியடைந்த மாடுகள், தப்பிக்கும் நோக்கில் கடலில் இறங்கியிருக்கக்கூடும். அவை கடலில் செத்து மிதக்கின்றன என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர். சிறுதலைக்காடு கிராமத்தில் இருந்து கடல் பகுதியை பார்க்கும்போது ஆங்காங்கே சில மாடுகள் செத்து மிதப்பதைக் காண முடிகிறது. அதேபோல கடலோரங்களில் மீன்கள் பெருமளவில் செத்து, அழுகிக் கிடக்கின்றன.

போர்க்கால நடவடிக்கை அவசியம்

இவ்வாறு மாடுகள், மீன்கள் செத்து மிதப்பதாலும், தண்ணீர் அதிக அளவில் மாசடைந்திருப்பதாலும் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளில் பெரும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கும், மாடுகளுக்கும் நோய் பரவும் ஆபத்து நிலவுகிறது. ஆங்காங்கே நடத்தப்படும் மருத்துவ முகாம்கள் போதுமானதல்ல என்றே தெரிகிறது. மாசடைந்து போயிருக்கும் நீர்நிலைகளைச் சுத்தம் செய்யவும், நோய்கள் பரவாமல் தடுக்கவும் போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகள் மிகவும் அவசியமாக உள்ளது.

          
SCROLL FOR NEXT