தமிழகம்

ஏழு பேர் விடுதலை பரிந்துரை; உள்துறைக்கு அனுப்பியிருந்தால் ஆளுநரை கோர்ட் கூண்டில் ஏற்றலாம்: வைகோ ஆவேசம்

செய்திப்பிரிவு

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவியேற்ற நாளிலிருந்து ஒரு போட்டி அரசாங்கத்தை தமிழகத்தில் நடத்தி வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜீவ் கொலையில் தண்டிக்கப்பட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் அதற்கான பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி அது உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் தருமபுரி பேருந்து எரிப்புக்குக் காரணமான அதிமுகவினர் 3 பேரை மட்டும் ஆளுநர் விடுவித்துள்ளதைக் கண்டித்து மதிமுக சார்பில் ஆளுநர் மாளிகை அருகே முற்றுகைப் போராட்டம் இன்று நடந்தது.

இந்தப் போராட்டத்தில் திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

முற்றுகைப் போரட்டத்தின் முடிவில் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''ஆளுநர் பன்வாரிலால புரோஹித்  7 பேரையும் விடுதலை செய்யாமல் அவர் திருப்பி அனுப்பி கருத்து கேட்கலாம். அதன் பின்னர் அமைச்சரவை கூடி மீண்டும் அதே பரிந்துரையை அனுப்பினால் ஆளுநர்  நிராகரிக்க முடியாது. வேண்டுமானால் காத்திருப்பில் வைக்கலாம்.

ஆனால் அதைச் செய்யாமல் உள்துறை அமைச்சகத்துக்கு எப்படிச் சென்றது என்பதுதான் கேள்வி? உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது ஆளுநர் என்றால் அவர் செய்தது சட்டவிரோதம், நடைமுறை விரோதம். ஆளுநர் பதவியேற்ற நாளிலிருந்து ஒரு போட்டி அரசாங்கத்தை மத்திய அரசின் ஏஜெண்டாக இருந்துகொண்டு நடத்தி வருகிறார்.

ஆகவே, ஆளுநரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோர்ட் கூண்டில் ஏற்றலாம். அவர் உள்துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரைத்திருந்தால் அவர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்ததாக வழக்கு தொடரலாம். ஒருவேளை அவர் தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பி இருந்தால், அதை தமிழக அரசு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி இருந்தால் அது ஈழத்தமிழர்களுக்கு செய்த பச்சைத் துரோகம்.

முதல்வர் பதவியில் நீடிக்க எந்தவித தார்மீக உரிமையும் எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது அமைச்சரவைக்கும் கிடையாது. ஆகவே இது சாதாரண பிரச்சினை கிடையாது. 7 பேரை விடுதலை செய்ய கோரிக்கை வைத்துக் காத்திருக்கும் நேரத்தில் பெண் பிள்ளைகளை எரித்துக் கொன்றவர்களை அரசு விடுதலை செய்துள்ளது''.

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

SCROLL FOR NEXT