தமிழகம்

திருமண விழாக்களில் பிரபலமாகிவரும் ரத்ததான முகாம்கள்: அங்கீகரிக்குமா தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்?

ச.கார்த்திகேயன்

அக். 1-ல் தேசிய தன்னார்வ ரத்ததான தினம்

திருமண விழாக்களில் ரத்ததான முகாம்களை நடத்தும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. விபத்தின்போதோ, அவசர சிகிச்சையின்போதோ ரத்தம் தேவைப்படுகிறது. இதனைப் பூர்த்தி செய்ய அனைவரும் ரத்ததானம் செய்ய முன்வருவதே தீர்வாக அமையும். அதுவும் 100 சதவீதம் தன்னார்வ தானமாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் இந்த இலக்கை 2020-ம் ஆண்டுக்குள் எட்ட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை அறிவுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் 2011-12 நிதியாண்டில் மொத்த ரத்த தானத்தில் தன்னார்வ ரத்த தானம் 94.35 சதவீதமாக இருந்தது. இது 2013-14 நிதியாண்டில் 94.34 சதவீதமாக குறைந்துள்ளது.

தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவிக்க 1975-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி தன்னார்வ ரத்ததான தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தின் போது அதிக முறை ரத்த தானம் செய்த தனி நபர், அதிக முறை ரத்ததான முகாம்களை நடத்திய அமைப்புகளை ஊக்குவிக்கவும், பிறரை ரத்த தானம் செய்ய வைக்கவும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கடந்த 20 ஆண்டுகளாக திருமண நிகழ்ச்சிகளில் ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் மணமக்களும், உறவினர்களும், நண்பர்களும் ரத்த தானம் செய்கின்றனர். கடந்த 2008-ல் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநர் அலுவலகம் மற்றும் மத்திய அரசின் வேலூர் கள விளம்பரத்துறை சார்பில் திருமண நிகழ்ச்சியில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. அதில் 35 பேர் ரத்ததானம் செய்தனர். இது குறித்து கள விளம்பரத்துறை சார்பில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு கடிதமும் அனுப்பப்பட்டது.

அண்மையில் வேலூரில் அரசுப் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பாண்டியன் என்பவரும், அவரது திருமணத்தில் ரத்ததான முகாம் நடத்தினார். மணமக்கள் உள்பட 20 பேர் ரத்ததானம் செய்தனர். இவரது திருமணத்தில் பங்கேற்க, இவர் பணிபுரிந்த கிராமப் பள்ளியில் படிக்கும் சிறாரும் வந்திருந்தனர். அவர்கள் ரத்த தானத்தை ஆச்சரியத்துடன் பார்த்தனர். இது குறித்து அச்சிறார்களிடம் கேட்டபோது, எங்களுக்கு ரத்த தானம் பற்றி எதுவும் தெரியாது. இப்போதுதான் எங்கள் ஆசிரியர் ரத்த தானம் செய்வது குறித்தும், அதன் அவசியம் குறித்தும் எங்களுக்கு விளக்கினார். நாங்களும் 18 வயதை கடந்தவுடன் ரத்த தானம் செய்வோம் என்றனர். இந்த ஆசிரியர், 12 வயதைக் கூட கடக்காத பள்ளிச் சிறார்களின் மனதில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை விதைத்திருக்கிறார். வேலூரில் செயல்பட்டு வரும் உதவும் உள்ளங்கள் அமைப்பைச் சேர்ந்த சந்திரசேகர் திருமணத்தில் ரத்த தானம் செய்வது குறித்து மேடைதோறும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தன்னார்வ ரத்த தானத்தில் 100 சதவீதத்தை எட்டுவது அவ்வளவு எளிதல்ல. அரிய வகை ரத்தம் தன்னார்வ தானம் மூலமாக பெற்றால் மட்டுமே 100 சதவீத இலக்கை எட்ட முடியும் என்பதை தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஒப்புக்கொள்கிறது. ரத்த தானத்தில் புதுமை படைத்தால் மட்டுமே தன்னார்வ ரத்த தானத்தில் 100 சதவீதம் இலக்கை எட்ட முடியும்.

இந்நிலையில் இதுபோன்ற புதுமைகளை தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் வெளியுலகிற்கு கொண்டுவருவதில்லை. இவர்களை கவுரவிப்பதும் இல்லை. இதை விளம்பரப்படுத்தினால் ரத்த தானத்தில் தமிழகம் தன்னிறைவடையும் என்று தன்னார்வ ரத்ததான ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் கூறும்போது, “ரத்த தானத்தில் புதுமையை நிச்சயம் ஊக்குவிப்போம். இது குறித்த விவரங்களை கொடுங்கள் பரிசீலிக்கிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT