தமிழகத்தில் எச்ஐவி, எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்க உறுதி யேற்போம். எச்ஐவி, எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களை மனிதநேயத்துடன் அரவணைப்போம் என்று உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி நேற்றுவெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
மக்களிடம் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. எச்ஐவி பரிசோதனை, சிகிச்சை மற்றும் எச்ஐவி தடுப்புபற்றி ‘உங்கள் நிலையை அறியவும்’ என்பது இந்த ஆண்டுக்கான உலக எய்ட்ஸ் தின மையக் கருத்தாகும்.
எச்ஐவி பரிசோதனை, சிகிச்சையை விரிவுபடுத்தவும், தமிழகம் முழுவதும் எச்ஐவி தொற்றை கண்டறியவும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் 2,561 நம்பிக்கை மையங்கள், 15 நடமாடும் நம்பிக்கைமையங்கள், 2 நடமாடும் விழிப்புணர்வு வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதுதவிர, எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 194 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டம்தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையம், கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களில் எச்ஐவி தொற்றுள்ள பெற்றோரிடம் இருந்து கருவில் உள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எச்ஐவி, எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றுவர இலவச பேருந்து பயண அட்டை, முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் ஆகியவை தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. சூரிய சக்தி மின் வசதியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தில், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்|னுரிமை அளிக்கப்படுகிறது.
எச்ஐவியால் பாதிக்கப்பட்ட இளம் விதவைகளுக்கு வயது வரம்பை தளர்த்தி மாத ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ரூ.10 கோடி வைப்பு நிதியுடன் தமிழக அரசு அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த நிதியில் இருந்து வரும் வட்டி மூலம் அந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு, கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மக்களிடம் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தமிழகத்தில் எச்ஐவி, எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்க உறுதியேற்போம். எச்ஐவி, எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களை மனிதநேயத்துடன் அரவணைத்து அவர்களுக்கு தன்னம்பிக்கை வளர உதவுவோம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.