மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பு ஆணை 2018, மாநிலங்களின் உரிமையைப் பறித்து, மீனவ மக்களின் பாரம்பரிய வாழ்வு உரிமையை மறுத்து, கடலையும். கடற்கரையையும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் முயற்சி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டிசம்பர் 28-ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில். கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை 2018க்கு ஒப்புதல் வழங்கி இருப்பது நாட்டின் 7500 கி.மீ. நீளக் கடற்கரையில் இருந்து மீனவ சமூகத்தை வெளியேற்றும் எதேச்சாதிகாரமான முடிவு ஆகும்.
மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை 02.07.2018-ல் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை 2011-ல், 16-வது முறையாக திருத்தங்கள் மேற்கொண்டு, அதனை கருத்துக் கேட்புக்காக இணையதளத்தில் வெளியிட்டது. பெயரளவுக்கு நடத்தப்பட்ட கூட்டங்களில் மீனவர் அமைப்புகள், சுற்றுச் சுழல் ஆர்வலர்கள், மத்திய அரசின் கடலோர மேலாண்மை வரைவுத் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் பாஜக அரசு, அனைத்துத் தரப்பினரின் எதிர்ப்புகளையும் அலட்சியப்படுத்திவிட்டு. கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை 2018 ஐ நடைமுறைப்படுத்த முனைந்து இருப்பது, கடும் கண்டனத்திற்கு உரியதாகும். 1991-ல் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்ட கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தில், கடல் அலை ஏற்றப் பகுதியில் இருந்து 500 மீட்டர் தூரம் வரையிலான பகுதியைக் கடலோர ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதி என்று வரையறுத்து, அதில் கட்டிடங்கள் கட்டுவது, சாலை அமைப்பது போன்றவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டது.
மேலும் புதிய ஒழுங்குமுறை விதிமுறைகள் வெளியிடப்பட்டு, கடலோரப் பகுதி 4 மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டன. 1996-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஆணையிலும் இதே விதிமுறைகள் பின்பற்றப்பட்டது.
2004-ம் ஆண்டு சுனாமி பேரழிவுக்குப் பின்னர். புதிய விதிகளை உள்ளடக்கி கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை 2011 (Coastal Regulation Zone -CRZ, Notification, 2011) வெளியிடப்பட்டது. இதன்படி, கடற்கரையில் இருந்து 200 மீட்டர் வரை எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களுக்கும் (No Development Zone -NOZ) அனுமதி இல்லை. ஆனால் தற்போது திருத்தப்பட்ட கடலோர மேலாண்மைத் திட்டத்தில் அலை ஏற்றத்திற்கும். அலை இறக்கத்திற்கும் இடைப்பட்ட பாதுகாக்கப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டலப் பகுதியை ரியல் எஸ்டேட் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.
அலை ஏற்றத்தால் பாதிக்கப்படும் நீர் நிலைகளில் இருந்து (ஆற்று முகத்துவாரங்கள். பின் நில ஏரிகள் போன்றவை) 100 மீட்டர் வரையில் பாதுகாக்கப்பட்ட பகுதி என்று வரையறுக்கப்பட்டு இருந்ததை, தற்போது 50 மீட்டர் என்று குறைத்துவிட்டனர். இதனால் பாதுகாக்கப்பட வேண்டிய கடலோரப் பகுதியில், தொழிலகங்கள், சுற்றுலா விடுதிகள், கட்டடங்கள், உணவகங்கள் அமைக்க அனுமதி வழங்கப்படும்.
மேலும் கடலோர மண்டலம் III, இப்போது இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் தொகை அடர்த்தி அதிகமான பகுதிகளில் 50 மீட்டர் தொலைவுக்கு அப்பால் கட்டுமானப் பணிளை மேற்கொள்ளலாம் என்று மாற்றப்பட்டு உள்ளது. இதன் மூலம் மக்கள் தொகை அடர்த்தியை தமது விருப்பம் போல நிர்ணயித்து, கடலோரப் பகுதி நிலங்களை மனை வணிகக் கட்டடத் தொழில் பகாசுர நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
கடலோர மண்டலம் I-ல் ராணுவ பாதுகாப்பு, போர் உத்தி முக்கியத்துவம் வாய்ந்த தேவைகள் மற்றும் பொது சேவைகளுக்காக சாலை அமைக்கவும், ஒழுங்குமுறை அறிவிப்பு ஆணை அனுமதிக்கின்றது.
மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பு ஆணை 2018, மாநிலங்களின் உரிமையைப் பறித்து, மீனவ மக்களின் பாரம்பரிய வாழ்வு உரிமையை மறுத்து, கடலையும். கடற்கரையையும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் முயற்சி ஆகும்.
லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடி, பெரு நிறுவனங்களின் கொள்ளைக்குக் கடலோரப் பகுதிகளை அளிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
மேலும் சுற்றுச் சூழல் சீர்கேடு அடைவதுடன், கடற்கரை வளங்களும் பெரு நிறுவனங்களின் பிடிக்குள் சென்றுவிடும் நிலை உருவாகும்.
எனவே மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பு ஆணையைத் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் நிராகரிக்க வேண்டும்'' என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.