தமிழகம்

இன்னும் 2 வாரங்களில் கஜா புயல் நிவாரண நிதி முடிவு செய்யப்படும்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கி.மகாராஜன்

'கஜா' புயல் பாதிப்பு தொடர்பான மத்தியக்குழுவின் அறிக்கை இறுதி செய்யப்பட்டு அடுத்த கட்ட குழுவுக்கு அனுப்பப்பட்டுவிட்டது என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

'கஜா' புயல் பாதிப்புகளை சரிசெய்ய துரித நடவடிக்கை கோரல், இழப்பீடுகளை உயர்த்தி வழங்குதல் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், திருச்சியைச் சேர்ந்த தங்கவேல், மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் நீதிபதிகள் பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்திருந்தனர்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய குழுவின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் 353.70 கோடி நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசிடம் விளக்கம் கோரியுள்ளதாக 2 முறை மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசின் விளக்கங்கள் போதுமானவையாக இருந்த நிலையில், மத்திய குழுவின் அறிக்கை இறுதி செய்யப்பட்டு அடுத்ததாக சப்-கமிட்டிக்கு அனுப்பப்பட்டுவிட்டது. தொடர்ந்து மத்திய செயல் கமிட்டியிடமும், உயர்மட்ட குழுவிடமும் அனுப்பப்படும். இன்னும் 2 வாரங்களில் தமிழகத்திற்கான கஜா புயல் நிவாரண நிதி முடிவு செய்யப்படும்" என தெரிவித்தார்.

தொடர்ந்து மத்திய அரசின் மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரணத்தொகையில் 1277.62 கோடி ரூபாய் இருக்கும் நிலையில், தேவைப்படும் பட்சத்தில் தமிழக அரசு அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு விரைவில் நிவாரணத்தொகை குறித்து அறிவிக்கும் என நம்புவதாக தெரிவித்து வழக்கை ஜனவரி 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT