தமிழகம்

பாஜக ஆணவத்துக்கு முற்றுப்புள்ளி: நாராயணசாமி பேட்டி

செ.ஞானபிரகாஷ்

பாஜக ஆணவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்தல் முடிவுகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியான சூழலில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளதையடுத்து புதுச்சேரி மாநில காங்கிரஸார் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜா திரையரங்கம் அருகே நடைபெற்ற கொண்டாட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் பங்கேற்று இனிப்புகள் வழங்கினர்.

தேர்தல் முடிவுகள் தொடர்பாக நாராயணசாமி கூறியதாவது:

''நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோடி தேர்தலாக இந்த 5 மாநிலத் தேர்தல் நிலவரம் அமைந்துள்ளது. இது கண்டிப்பாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். ஐந்து மாநிலங்களில் மூன்றில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலையுள்ளது.

மக்களை ஏமாற்றி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரிய பாடமாக இத்தேர்தல் முடிவுகள்  அமைந்துள்ளன. அவர் 24 மணிநேரமும் அரசியல் செய்யக்கூடாது. அத்துடன் காங்கிரஸ் தலைவர் ராகுலின் தீவிர பிரச்சாரமும் வெற்றிக்கு முக்கியக் காரணம். பாஜக ஆணவத்துக்கு இத்தேர்தல் முடிவுகள் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT