ஸ்டெர்லைட் ஆலையை மூடியது மூடியதுதான். திறப்பதற்கு வழியே இல்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சமூக நலத்துறை சார்பில் சென்னையில் மாற்றுத்திறனாளி களுக்கான உபகரணங்கள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இவ்விழாவில் பங்கேற்ற அமைச்சர் டி.ஜெயக் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை விரிவாக்கம் முதல் அனைத்து அனுமதிகளையும் கொடுத்தது திமுகதான். ஆனால், கொடுத்துவிட்டு இன்று பேசுவதை யாரும் நம்பமாட்டார்கள். எங்களை பொறுத்தவரை கொள்கை முடிவு இது. மூடியது மூடியதுதான். திறப்பதற்கு வழியே இல்லை. இருப்பினும் அனைத்தும் நீதிமன்ற சீராய்வுக்கு உட்பட்டது தான். எங்களை பொறுத்தவரை மக்கள் விரும்பாத திட்டத்துக்கு எங்கள் ஆதரவு இல்லை.
மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்கிறார்.
தமிழக அரசு உச்சநீதிமன் றத்தை நாடி வெற்றி பெற்றுள்ளது. அங்கு அவர்கள் சென்றால் வெற்றி பெற முடியாது என்று தெரியும். எனவே தான் ‘சண்டைக்காரன் காலில் விழுவதை விட, சாட்சிக் காரன் காலில் விழலாம்’ என்று தமிழகத்தை நாடுகின்றனர். ஆனால், அது காலம் தாழ்த்திய செயல்.
எனவே, ஸ்டெர்லைட் விவகாரமாக இருந்தாலும், மேகே தாட்டு விவகாரமாக இருந்தாலும் தமிழக மக்களின் உணர்வுகள் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.