வெளிநாட்டு கார்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சமீப காலமாக ஆன்லைனில் அமெரிக்க தூதரக அதிகாரிகளின் கார்களை விற்க உள்ளதாக விளம்பரம் செய்யப்படுகிறது. அமெரிக்க தூதரக அதிகாரிகள் பயன்படுத்திய கார்கள் என்றால் ஓட்டம் அதிகமிருக்காது. நல்ல தரமான முறையில் பராமரிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவின் நேரடியான தயாரிப்பு என ஆசைப்பட்டு பலரும் ஆன்லைன் விளம்பரத்தை நம்பி அவர்களது பண மோசடியில் வீழ்ந்து பணத்தை இழந்ததாக புகார்கள் எழுந்தது.
இதையடுத்து போலியான விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்று அமெரிக்க தூதரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் வாகனங்கள் விற்பனைக்கு வருவதாக இணையதளங்களில் விளம்பரங்கள் வந்துள்ளன. கடந்த நான்கு மாதங்களில் 5 பேர் இப்படிப்பட்ட விளம்பரங்களை நம்பி ரூ.30 ஆயிரம் வரை கட்டி ஏமாற்றம் அடைந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது பற்றி காவல் துறையிடம் தெரிவித்து இருக்கிறோம்.
அமெரிக்கத் துணைத் தூதரகம் இணையவழி விளம்பரம் மூலமாக வாகனங்களை விற்பனை செய்வதில்லை. அவ்வாறு ஏதேனும் விளம்பரம் வெளியானால், அது உண்மைதானா? என்பதை உறுதி செய்ய, தூதரகத்தை பொதுமக்கள் தொடர்பு கொள்ளுங்கள்.
ஆன்லைனில் விளம்பரத்தைப்பார்த்து முன்பணம் ஏதும் செலுத்துவதற்கு முன்னால்,விற்பனையாளரை நேரடியாக சந்தித்து வாகனங்களைப் பார்வையிடுங்கள். ஒருவேளை நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால், அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள்” இவ்வாறு எச்சரித்துள்ளனர்.