தமிழகம்

ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம்: உயர் நீதிமன்ற வேண்டுகோளை ஏற்று டிச.10 வரை ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

ஜாக்டோ ஜியோ நாளை நடத்தவிருந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை உயர் நீதிமன்ற வேண்டுகோளை ஏற்று டிச.10 வரை ஒத்திவைத்துள்ளனர்.

இதுகுறித்து ஜாக்டோ ஜியோ மாநில நிர்வாகிகள் மதுரையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி:

“டிச.4 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்திருந்தோம். இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் போராட்டத்துக்கு தடைக்கேட்டு பொதுநலவழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அது நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதில் ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.  இருதரப்பையும் கேட்டுக்கொண்ட நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டார்கள். 9-ம் தேதிவரை போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த கேட்டுக்கொண்டார்கள். அரசுத் தரப்பில் வரும் 9-ம் தேதி அன்று ஜாக்டோ ஜியோ போராட்டத்தை நிறுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்,

அதுவரை போராட்டத்தை ஒத்திவைக்க நீதிமன்றம் கேட்டுக்கொண்டதை அடுத்து நாளை நடக்கவிருந்த போராட்டத்தை 10-ம் தேதி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம். நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப அன்று மாலை முடிவு செய்வோம்.

இன்று நீதிமன்ற உத்தரவு நம்பிக்கை அளிக்கிறது. அரசுத் தரப்பு கஜா புயலைக் காரணம் காட்டித்தான் போராட்டத்தை ரத்து செய்யக் கேட்டார்கள். கிட்டத்தட்ட ரூ.100 கோடி அளவில் நிவாரண நிதியாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களுடைய பங்களிப்பாக அளித்துள்ளனர். அதுமட்டுமல்ல ரூ.50 லட்சம் அளவிலான நிவாரணப் பொருட்களை சங்கத்தின் சார்பாக புயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளோம்.

மேலும் புயல் பாதித்த பகுதிகளில் பணியாற்றுபவர்கள் கையொப்பமிடாமல் பணியைத் தொடர்ந்து செய்வதை நீதிமன்றத்தில் தெரிவித்ததை நீதிமன்றம் வரவேற்று எங்களுடைய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க மறுத்தது வரவேற்கத்தக்கது.”

இவ்வாறு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT