செந்தில் பாலாஜிக்கும் தனக்குமான தொடர்பை விவரித்துள்ள டிடிவி தினகரன் விரோதியுடன் செல்லாமல் துரோகியுடன் சென்றிருக்கலாம் என்பதில் வருத்தம் என டிடிவி தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது:
செந்தில் பாலாஜி குறித்த தகவலை அப்போது ஜெயலலிதா என்னிடம் கேட்டார். அதுமுதல்தான் இவர் எனக்குத்தெரியும். அப்போது செந்தில் பாலாஜி மாணவரணி மாநிலச்செயலாராக இருந்தார். மாநில செயலாளர் கலைராஜனிடம் கேட்டேன் அவர் நல்லவிதமாக சொன்னார், அப்போது கரூர் மாவட்டத்தில் முக்கிய அதிகாரியிடம் விசாரித்தேன்.
அவரும் நல்லவிதமாக சொன்னார் ஜெயலலிதா கேட்கும்போது அதற்கு சரியான பதில் அளிக்கவேண்டும் அல்லவா? அதன் பின்னர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 2, 3 பேர் லிஸ்ட்டை கொடுத்தேன். 2006 தேர்தலில் திமுக மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனை தோற்கடித்தார்.
இடையில் மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் 2007-ல் ஜெயலலிதா என்னை ஒதுக்கி வைத்தபோது நான் ஒதுங்கி வந்துவிட்டேன், இதைச் சொன்னால் ஜெயக்குமார், எடப்பாடிக்கு சந்தோஷமாக இருக்கும். அதன் பின்னர் அவரை பார்க்கவில்லை. 2011 சட்டமன்ற உறுப்பினர் ஆனார். மாவட்டச்செயலாளர் ஆனார். அப்படியே வளர்ந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் உங்களுக்கு நடந்தது எல்லாம் தெரியும், ஓபிஎஸ் செய்தது, எடப்பாடி அண்ணன் பதவி ஏற்று மூன்றாவது நாளே துரோகம் செய்தது எல்லாம் அனைவருக்கும் தெரியும். அதன்பின்னர் சட்டமன்ற உறுப்பினர்களுடன் செந்தில் பாலாஜியும் வருவார். பழனியப்பனும் வருவார், வெற்றிவேல், தங்கத்தமிழ்ச்செல்வன் உட்பட மற்றவர்களும் வருவார்கள்.
எங்களுடன் நல்லமுறையில்தான் இருந்தார். 4 மாதத்துக்கு முன் திடீரென வந்து எனக்கு சொந்தப் பிரச்சினை எல்லாம் இருக்கு முடித்துவிட்டு வருகிறேன் கொஞ்ச நாள் ஆக்டிவா இருக்கமாட்டேன் என்றார். சரி என்று சொல்லிவிட்டேன். அதன்பின்னர் கஜா புயல் நிவாரண பொருட்களை மாவட்டத்திலிருந்து அனுப்பி வைத்தார். அதன்பின்னர் ஜெயலலிதா நினைவு நாளில் அவர் வரவில்லை.
நான் எங்கே என்று உதவியாளரிடம் கேட்டேன். கேட்டபோது வழக்கு விஷயமாக இருக்கிறேன் என்று தெரிவித்தார். அதன் பின்னர் திமுகவுக்கு போவதாக தகவல் வந்தபோது தலைமை நிலைய செயலாளரிடம் இதுப்பற்றி கேட்டபோது ஆமாம் அது சம்பந்தமாகத்தான் அவரைப்பார்க்கப்போகிறேன் என்று பார்க்கப்போனார்.
அதன்பின்னர் ஆமாம் சார் அவர் மனபோக்கு சரியில்லை, ஏதோ 18 எம்.எல்.ஏக்களை தான் அழைத்து வந்ததுபோன்ற தொனியில் பேசுகிறார், அவர் பேச்சு சரியில்லை என்றார். நானும் பரவாயில்லை என்று விட்டுவிட்டேன். யாரையும் பிடித்து வைக்க முடியாது அல்லவா? நல்ல தம்பிதான் சொந்தப்பிரச்சினை இருக்கு என்று போனார், இப்ப ஏதோ ஒரு மாதமாக விருப்பப்பட்டு இருக்கப்பட்டு போனதாக சொல்கிறார்.
ஓக்கே ரொம்ப நன்றி, எங்கிருந்தாலும் வாழ்க. எங்களிடம் இருந்த ஒன்றரை ஆண்டுகளில் நன்றாகத்தான் இருந்தார். சொந்தப்பிரச்சினைக்காக ஒதுங்கி இருப்பதாக சொன்னவர் போய்விட்டார். ஏதோ அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூடாரம் காலியானதாக சொல்கிறார்கள் அப்படி எதுவும் நடக்கவில்லை.
நாங்கள் அதிமுக அணியாக இருந்தபோது அணி அமைத்தோம். அதன் பின்னர் அமமுக ஆரம்பித்தபோது நிர்வாகிகள் பெரும்பாலும் முடித்துவிட்டோம். அவர் போவதில் எனக்கு வருத்தம் ஒன்றுமில்லை. ஏனென்றால் எங்கிருந்தாலும் வாழ்க, அது அவரது சொந்த விருப்பம், அவர் காரணம் சொன்னால் இங்கிருப்பவர்கள் பதில் சொல்வார்கள்.
எனக்கு வருத்தம் என்னவென்றால் அவர் மாவட்டத்தில் உறுப்பினர் சேர்ப்பு படிவங்கள் சேர்த்து வைத்துள்ளதாக உதவியாளர் என்னிடம் சொன்னார். அதை திருப்பி அளித்தால் நன்றாக இருக்கும். விரோதிகளுடன் போனதில் துரோகிகளுடன் போயிருக்கலாம் என்ற ஒன்றே வருத்தம்.