இந்து கோயிலில் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் தியானம் செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் தியான நிகழ்ச்சி, நேற்றைய தினம் மாலை 4 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.
இந்நிலையில், கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவர் தரப்பில் அவரது வழக்கறிஞர் முத்துக்கிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், "யுனெஸ்கோவால் சோழர்களின் சிறப்பான கோயில் என்ற சிறப்பைப் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில், இது போன்ற தனியார் அமைப்புகளுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிப்பது கோயிலின் சிறப்பைப் பாதுகாக்கத் தவறும் நடவடிக்கை.
மேலும், நிகழ்ச்சியை நடத்தும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் 2017-ல் யமுனை நதிக்கரையில் மாசு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடத்தியதற்காக பசுமை தீர்ப்பாயத்தால் 5 கோடி அபராதம் விதிக்கப்பட்டவர். ஆகவே, தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் சார்பில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்த தடை விதிக்க வேண்டும்" என முறையிட்டார்.
இதையடுத்து அந்நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது. முன்னதாக, இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்பட்டது குறித்து தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், "நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டதில் நிச்சயம் உள்நோக்கம் இருக்கிறது. கோயிலில் இம்மாதிரியான பஜனை, பிரசங்கம் செய்யக்கூடாது என்பது வருத்தமளிக்கிறது. இவற்றை நடத்துவதற்குத் தான் கோயில்கள் இருக்கின்றன. அதற்கு நாங்கள் எல்லா அனுமதிகளும் வாங்கினோம். பெரிய கோயிலில் நடத்த வேண்டும் என்று மக்கள் ஆசைப்பட்டனர். இந்து கோயிலில் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் தியானம் செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது" என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.