தமிழகம்

திருவாரூர் மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து  நிவாரணம் வழங்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் சாலை மறியல்

எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர் மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து அதற்கேற்ப நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

வங்கக் கடலில் உருவாகி வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த ‘கஜா’புயலால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் புயலால் 63 பேர் மரணமடைந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏராளமான ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும், தென்னை, வாழை உள்ளிட்ட மரங்களும் லட்சக்கணக்கில் சேதமடைந்துள்ளன. ஓட்டு மற்றும் கூரை வீடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

ஏராளமான தன்னார்வலர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்தப் புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இன்னும் பல கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து அதற்கேற்ப நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மன்னார்குடி, காசாங்குளம், கோட்டூர், திருத்துறைப்பூண்டி, மாவூர், மாங்குடி, முத்துப்பேட்டை, உட்பட ஏராளமான இடங்களில் நூற்றுக்கணக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். நிவாரண வண்டிகளுக்கு மட்டும் வழிவிட்டு மற்ற வண்டிகளை நிறுத்தி சாலையின் குறுக்கே மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து அதற்கேற்ப நிவாரணம் வழங்க வேண்டும், கூரை வீடு, ஓட்டு வீடு, தொகுப்பு வீடு மாடி வீடு என பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT