திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த முள்ளுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு கவியரசு, காவியா, தமிழரசு ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
இதே ஊரைச் சேர்ந்த சிவ லிங்கம் என்பவர் கவிதாவின் தந்தை சின்ன பையனுக்கு கொடுத்த ரூ.3 ஆயிரம் கடனை, சின்னபையன் திருப்பிக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கடனை கேட்டு சில நாட்களுக்கு முன்பு கவிதாவின் வீட்டுக்கு சிவலிங்கம் சென்று மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், திங்கட்கிழமை கவிதாவின் வீட்டுக்குச் சென்ற சிவலிங்கம், ‘வாங்கிய பணத்தை கொடுக்காவிட்டால் தன் ஆசைக்கு இணங்க வேண்டும்’ என வற்புறுத்தி, கவிதாவை நாட்டுத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி உள்ளார். பயந்துபோன கவிதா, தனது 2 வயது மகனை தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு ஓடினார். அப்போது, சிவலிங்கம், நாட்டுத் துப்பாக்கியால் கவிதாவை நோக்கி சுட்டதில், குறி தவறி குழந்தையின் இடுப்புப் பகுதியில் துப்பாக்கி ரவைகள் பாய்ந்தன. காட்டுப் பகுதிக்குள் சிவலிங்கம் தலைமறைவானார். படுகாயம் அடைந்த 2 வயது குழந்தை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டது. பின்னர், குழந்தையின் உடலில் பாய்ந்த துப்பாக்கி ரவையை அகற்ற சென்னை எழும் பூர் குழந்தைகள் நல மருத்துவ மனையில் செவ்வாய்க்கிழமை சேர்த்தனர்.
இதுகுறித்து, ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் கவிதா புகார் கொடுத்ததின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து சிவ லிங்கத்தைத் தேடி வருகின்றனர்.
குழந்தைக்கு தீவிர சிகிச்சை
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது: குழந்தையை பரிசோதனை செய்து பார்த்ததில், குழந்தையில் மார்பு பகுதியில் துப்பாக்கி குண்டு இருப்பது தெரிய வந்தது. தற்போது குழந்தையை அறுவைச் சிகிச்சை வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். வியாழக்கிழமை குழந்தையின் மார்பு பகுதியில் பாய்ந்துள்ள குண்டை அறுவைச் சிகிச்சை மூலம் எடுக்க திட்ட மிட்டுள்ளோம்’’ இவ்வாறு அவர் கள் தெரிவித்தனர்.