தமிழகம்

23 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு குரங்கணி மலையேற்றத்துக்கு வனத்துறை மீண்டும் அனுமதி

செய்திப்பிரிவு

தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்த குரங்கணியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள புதிய நிபந்தனைகளுடன் 8 மாதங்களுக்குப் பிறகு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள குரங்கணி மலைப் பகுதி யில் கடந்த மார்ச் 11-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணிகள் 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, குரங்கணிக்கு மலையேற்றம் செல்ல தேனி மாவட்ட வனத்துறையினர் தடை விதித்தனர். கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இந்த தடை நீடித்து வந்த நிலையில், நேற்று முதல் குரங்கணி மலைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட வன அலுவலர் எஸ்.கவுதம் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

நவ.30-ம் தேதி (நேற்று) முதல் குரங்கணிக்கு மலையேற்றப் பயிற்சி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குரங்கணியில் இருந்து சென்ட் ரல் ஸ்டேசன் வழியாக 11 கி.மீ. தொலைவில் உள்ள டாப் ஸ்டேசனுக்கு செல்லலாம்.

10 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் கர்ப்பிணி களுக்கு மலையேற்றம் செல்ல அனுமதி இல்லை. உள்ளூர் சுற்றுலா பயணிகளிடம் ரூ.350, வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளிடம் ரூ.3,000 கட்டணமாக வசூலிக்கப்படும்.

மலையேறுபவர்களை அழைத் துச் செல்வதற்காக குரங்கணியில் 14 வழிகாட்டிகள் உள்ளனர். மலையேற்றத்தின்போது சமைப்பதற்கோ, புகையிலைப் பொருட்கள், மது போன்றவற்றை கொண்டு செல்லவோ அனுமதி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT