நாட்டிலேயே முதல்முறையாக சட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் ஒற்றைச் சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு சேர்க்கை கடிதங்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன் வழங்கினார்.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உட்பட மொத்தம் 7 சட்டக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சட்ட பட்டமேற்படிப்புக்கு (எம்.எல்) 160 இடங்கள் உள்ள நிலையில், மொத்தம் 518 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக சட்ட மேற்படிப்புக்கு ஒற்றைச்சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கை முறை கடைபிடிக்கப்பட்டது.
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை காலை 10.30 முதல் மாலை 5 மணி வரை ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடந்தது. தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை கடிதங்களை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன் வழங்கினார்.
பின்னர் அவர் பேசும்போது, ‘‘முன்பெல்லாம் குறிப்பிட்ட சிலர் மட்டுமே சட்டம் படித்து வந்தனர். அந்த நிலை இப்போது முற்றிலும் மாறியுள்ளது. எல்லோரும் சட்டம் படிக்கின்றனர். வழக்கறிஞர்கள் சமூகத்தில் முக்கியமான இடத்தில் உள்ளனர். நல்ல வழக்கறிஞர்களுக்கு மக்களிடம் பெரிய அளவில் மரியாதை உள்ளது. வழக்கறிஞர்கள் சட்டத்துறையில் பட்டமேற் படிப்புகளை படித்து, தொடர்ந்து சமூக முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும்’’ என்றார்.
அம்பேத்கர் சட்டக் கல்லூரி முதல்வர் என்.எஸ்.சந்தோஷ்குமார் கூறும்போது, ‘‘சட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் எந்த தலையீடும் இல்லாமல், நேர்மையாக முறையில் நடத்தவே நாட்டிலேயே முதல்முறையாக ஒற்றைசாளர முறையை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
இந்த ஆண்டு எம்.எல். படிப்புக்கு மொத்தம் 518 பேர் விண்ணப்பித்திருந்தனர். பி.எல். படிப்பில் எடுத்த மார்க் அடிப்படையில் தேர்வு செய்யப் பட்ட 160 பேருக்கு 7 கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன’’ என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை செயலாளர் டாக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.