மதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே 133 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட ஏவி. மேம்பாலம் நூறாண்டை கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.
மதுரையில் பாரம்பரிய அடையாளங்களில் பழமையான ஏவி. மேம்பாலம் (ஆல்பர்ட் விக்டர்) முக்கியமானது. தினமும் 3 லட்சம் வாகனங்கள் இந்த மேம்பாலத்தை கடந்து செல்கின்றன. அத்தனை எடையையும், அதன் வேகத்துக்கும் ஈடு கொடுத்து, இன்றும் வலுவாக இருக்கும் இந்த ஏ.வி.மேம்பாலம் பிரிட்டிஷாரின் கட்டுமானத் திறமைக்கு இன்றுவரை சான்றாக திகழ்கிறது.
லட்சக்கணக்கானோர் கூடும் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் இந்த மேம்பாலத்தின் அருகேதான் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கும். இந்த பாலம் கட்டுவதற்கு முன் வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் மக்கள் மதுரையின் தென் பகுதியிலிருந்து வடபகுதிக்கு செல்ல முடியாமல் இரு பகுதிகளும் தனித்தனி தீவாகவே இருந்துள்ளன.
அப்போது யானைக்கல் - செல்லூர் பகுதிக்கு இடையே வைகை ஆற்றில் கற்களை கொண்டு அடுக்கி தரைப்பாலம் ஒன்றை பிரிட்டிஷார் அமைத்தனர். வைகை ஆற்றில் வெள்ளம் வரும்போது, இந்தப் பாலத்தில் செல்வதற்கு மக்கள் சிரமம் அடைந்தனர். அதனால், தற்போது ஏவி மேம்பாலம் இருக்கும் பகுதியிலேயே பிரிட்டிஷ் அதிகாரிகளின் சாரட் வண்டிகள் மட்டும் செல்வதற்காக மூங்கில்களைக் கொண்டு முதலில் பாலம் அமைத்துள்ளனர். ஆனால், சாரட் வண்டிகளின் சக்கரம் அடிக்கடி இந்த மூங்கில் கழிகளில் சிக்கியதால் வண்டியை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
அதன் பிறகுதான், இந்த இடத்தில் வைகை ஆற்றின் குறுக்கே உயர்நிலை மேம்பாலம் அமைக்கும் முடிவுக்கு பிரிட்டிஷ் அதிகாரிகள் வந்தனர். அப்படி அவர்கள் சிரமப்பட்டு உருவாக்கிய பாலம்தான், எத்தனையோ இயற்கை சீற்றங்களை தாங்கி நூறாண்டுகளை கடந்தும் தற்போது கம்பீரமாய் நிற்கிறது.
நேற்று வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் தலைமையில், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் கே.சி.திருமாறன், நீர்நிலைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் உள்ளிட்டோர் மேம்பாலத்தில் திரண்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இதுபற்றி வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறியதாவது:
1886-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி அப்போதைய பிரிட்டிஷ் அரசின் வைசிராயாக இருந்த எர்ல் ஆஃப் டஃப்ரைன் இந்த பாலத்தின் கட்டுமானப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார். இந்தப் பாலம் சுமார் இரண்டரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தை திறந்து வைக்க அப்போதைய பிரிட்டிஷ் இளவரசர் ஆல்பர்ட் விக்டர் மதுரைக்கு வருவதாக இருந்தது. மதுரையில் அந்த நேரத்தில் கொடிய பிளேக் நோய் பரவியதால் இளவரசர் அந்த பயணத்தை தவிர்த்தார். ஆனாலும், அவரது நினைவாக அந்த பாலத்துக்கு ஆல்பர்ட் விக்டர் என்ற பெயரே வைக்கப்பட்டது. இந்தப் பாலம் கட்டுவதற்கு அப்போது ரூ. 2.85 லட்சம் செலவானது.
தற்போது இந்த பாலம் பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கே சிதலமடைந்துள்ளது. மதுரையின் அடையாளமாகத் திகழும் ஏவி மேம்பாலத்தை அதன் பழமை மாறாமல் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.