சென்னையில் டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தெளிவான அறிக்கையைத் தாக்கல் செய்யாவிட்டால் அதிகாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க நேரிடும் என்று உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை நகரில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வந்ததை அடுத்து கொசுக்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்த கால்வாய்களை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இது சம்பந்தமாக ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி சார்பில் ஓராண்டுக்குப் பின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கால்வாய்களைத் தூர்வார 1,034 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை நகரில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் இருந்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது குறித்து மாநகராட்சி தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பட்டியலிட்டார். அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், நிதி ஒதுக்கீடு ஒருபுறம் இருந்தாலும் ஆக்கப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
பின்னர் வழக்கின் விசாரணையை டிசம்பர் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள், அன்றைய தினம் தெளிவான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க நேரிடும் எனவும் எச்சரித்தனர்.