கிறிஸ்துமஸ் பண்டிகையன்று இரவில், பைக் ரேஸில் ஈடுபட்ட 24 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையன்று அதிகாலையில் தேவாலயத்துக்கு சென்றுவிட்டு மெரினா கடற்கரை சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் பொதுமக்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டனர். வீடுகளுக்கு சென்று கொண்டிருந்த மக்கள் இதைப் பார்த்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக மெரினா மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் போலீஸார் சோதனையில் ஈடபட்டனர். இரு இடங்களில் பேரிகார்டுகள் வைத்து சந்தேகத்துக்குரிய இரு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது பைக் ரேஸில் ஈடுபட்டதாக 24 இருசக்கர வாகனங்களை அடையாறு போக்குவரத்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.
போலீஸாரின் சோதனையையும் மீறி, திருவான்மியூரில் இருந்து கானத்தூர் வரை கிழக்கு கடற்கரைச் சாலையில் 4 பைக்குகளில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டனர். ஈஞ்சம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே செல்லும்போது நிலை தடுமாறிய பைக் ஒன்று சாலைத் தடுப்பின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் பைக்கை ஓட்டிச் சென்ற கொடுங்கையூர் யூனியன் கார்பைடு நகரைச் சேர்ந்த நிதிஷ்குமார் (19) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த கொடுங்கையூர் முத்தமிழ்நகரைச் சேர்ந்த தினேஷ் (18) பலத்த காயமடைந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.