தமிழகம்

‘பெதாய்’ புயலால் கடலரிப்பு, மீன்பிடி படகுகள் சேதம் ஏற்பட வாய்ப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் - 3 நாட்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை

கி.கணேஷ்

வங்கக் கடலில் உருவாகும் ‘பெதாய்’ புயல், சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்ட கடலோரப் பகுதி மீனவர்களுக்கு கடும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்திய தேசிய கடற்கரைசார் தகவல் வழங்கும் சேவை மையம் (INCOIS) வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில், “வங்கக் கடலில் வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 14-ம் தேதி மாலை 5.30 முதல் 16-ம் தேதி இரவு 11.30 வரையிலான காலகட்டத்தில் தமிழக கடற்கரையில் மணிக்கு 75 கிமீ வேகம் வரை காற்று வீசக்கூடும். தனுஷ்கோடி முதல் பழவேற்காடு வரையிலான கடலோரப் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். அதன் காரணமாக கடலோரப் பகுதியில் 2.5 மீட்டர் முதல் 4.5 மீட்டர் உயரம் வரை அலை எழும்பக்கூடும்” என்று எச்சரித்துள்ளது. மேலும் 12-ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையமும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலரான ந.செல்வகுமார், ‘பெதாய்’ புயலின்போது எழும்பும் பேரலைகளால் கரைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடையக்கூடும் என்றும், கடலோர குடியிருப்புகளில் தண்ணீர் புகும் என்றும், கடலரிப்பு அதிகமாக இருக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

இந்தப் புயல் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே கரையை நெருங்கும். அங்கிருந்து கடலோரமாகவே நகர்ந்து செல்லும். அப்போது புயலின் மையப்பகுதி கடலோரப் பகுதியில் இருந்து 100 கிமீ தொலைவில் கடலில் இருக்கும். மையப் பகுதியில் மணிக்கு சுமார் 250 கிமீ வேகத்தில் மிக பலத்த காற்று வீசும். கரையோரப் பகுதிகளை புயலின் வெளிப்பகுதிதான் தொட்டுச் செல்லும் என்பதால், கரையோரங்களில் சுமார் 100 கிமீ வேக அளவில் காற்று வீசும். பழவேற்காடு, எண்ணூர், ஹரிகோட்டா ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் சுமார் 120 கிமீ வரை இருக்கும்.

புயலின் மையப் பகுதியில் மிக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், கடல் மிக அதிக அளவில் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் 15-ம் தேதி இரவு முதல் 16-ம் தேதி அதிகாலை வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கடலோரங்களில் மிகக் கடுமை யான கடலரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாச புரம் உள்ளிட்ட கடலோர மீனவ குடியிருப்பு களுக்குள் கடல்நீர் புகும் அபாயம் உள்ளது. எனவே, மீனவ குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப் படுத்த வேண்டும். படகுகள் சேதமடை வதை தடுக்க பாதுகாப்பான இடங்களில் நிறுத்த வேண்டும். படகுகள் மோதி சேதமடைவதைத் தடுக்க உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களை வேறு துறைமுகங்களுக்கு அனுப்பி வைக் கலாம்.

இவ்வாறு செல்வகுமார் கூறினார்.

‘பெதாய்’ புயலால் மீனவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கூறப்படும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மீனவர்களுக்கு இது பற்றிய போதிய தகவல்கள் தெரியவில்லை. இது தொடர்பாக அகில இந்திய மீனவர் சங்க தேசிய செயல் தலைவர் நாஞ்சில் பி.ரவி கூறும்போது, “மீனவ குடியிருப்புகளில் ஏற்படக் கூடிய பாதிப்பு குறித்தோ, படகுகள் சேதம் குறித்தோ இதுவரை எந்த எச்சரிக்கையும் எங்களுக்கு வந்து சேரவில்லை” என்றார்.

தென்னிந்திய மீனவர் நலச்சங்கத் தலைவர் கு.பாரதி கூறும்போது, "வானிலை முன்னறிவிப்பில் போதிய தெளிவில்லை. எச்சரிக்கைகள் பொது வாகத்தான் உள்ளனவே தவிர, குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படக் கூடிய பாதிப்புகள் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை” என்றார்.

தமிழக மீனவர் மக்கள் முன்னணி தலைவர் ஜெ.கோசுமணி கூறும்போது, "என்னதான் எச்சரிக்கை கொடுத்தாலும், மீன்பிடி துறைமுகங்களில் படகுகள் சேதமடைவதை தடுக்க முடியாது. அதற்கான வசதிகள் எதுவும் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்பை மட்டுமே தடுக்க முடியும்” என்றார்.

இந்நிலையில், ‘பெதாய்’ புயலால் கடல் பகுதியில் ஏற்பட்டு வரும் நிகழ்வுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மாநில மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது பற்றி 'இந்து தமிழ்' நாளிதழிடம் பேசிய அவர், ‘‘வானிலை ஆய்வு மைய அறிவிப்புகளின்படி, மீனவர்களுக்கு தொடர்ந்து போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவ மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள். சிறிய ரக படகுகள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்படும். பெரிய அளவிலான படகுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கழிமுகப்பகுதிகளில் நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

‘யூக தகவல்களை நம்ப வேண்டாம்’

வருவாய், பேரிடர் மீட்புத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தம் தொடர்பாக, பல்வேறு செய்திகளை ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்துகின்றனர். இந்தச் செய்திகள் எல்லாம் யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படுகிறது. டிச.15 மற்றும் 16 தேதிகளில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்யலாம் என்கிற எச்சரிக்கையும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 32 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி, ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த நிலையை உன்னிப்பாக கவனித்து தேவையான நேரத்தில் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்குவோம்.

15, 16-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் நிலவி வந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். 14-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு ஆந்திரா, வட தமிழகத்தை நோக்கி நகரக்கூடும். அதன் காரணமாக வரும் 15, 16 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுவதன் காரணமாக 13-ம் தேதி தெற்கு வங்கக் கடலில் மத்திய பகுதிகளுக்கும், 14-ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கும், 15-ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம்.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா என்பது குறித்து உடனடியாக தெரிவிக்க முடியாது. அதன் மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதுகுறித்து உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கப்படும்.

SCROLL FOR NEXT