தமிழகம்

குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையில் உயிரிழந்தார் பெண்: `உங்கள் குரல் மூலம் வந்த அதிர்ச்சி புகார்

செய்திப்பிரிவு

குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததாக ஓர் அதிர்ச்சி தகவல் `தி இந்து' தமிழ் அறிமுகப்படுத்தியுள்ள> `உங்கள் குரல்' தொலைபேசி எண்ணுக்கு புகாராக வந்தது.உடனடியாக விசாரித்தபோது அறுவைசிகிச்சையின்போது அந்த பெண் கோமா நிலைக்குச் சென்று உயிரிழந்தது தெரியவந்தது.

கோவை சுக்ரவார்பேட்டை தியாகி குமரன் வீதியைச் சேர்ந்தவர் வினோத்குமார், கூலித்தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி (32). இவர்களுக்கு ரம்யா (6), கனிஷ்கா (1) ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் இரு பெண் குழந்தைகளுக்கும் அரசின் உதவித்தொகை கிடைக்கும் என்பதால் கடந்த ஜூலை 25-ம் தேதி, கோவை டவுன்ஹால் வைசியாள் வீதி, மாநகர நகர் நல மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் நடத்தப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு சிறப்பு முகாமில் சிகிச்சைக்காக கலைவாணி சென்றார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் மூலமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அழைத்து வரப்பட்ட 20 பெண்களில் 14-வதாக கலைவாணிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை யின்போதே கலைவாணிக்கு வலிப்பு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்குச் சென்றார்.

இதையடுத்து, மாநகர நகர் நல மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு கோமா நிலையில் இருந்து மீட்பதற்கான தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கடந்த ஒரு வாரமாக கோமாவிலேயே இருந்த அவர், வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

வசதிகள் குறைபாட்டால் உயிரிழப்பு?

மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் குடும்பக் கட்டுப்பாடு சிறப்பு முகாம்கள் மாநகர நகர் நல மருத்துவமனைகளிலோ, ஆரம்ப சுகாதார மையங்களிலோ மாதம் இருமுறை நடத்தப்படுகின்றன. இவ்வாறு, வைசியாள் வீதியில் உள்ள மாநகர் நகர் நல மருத்து வமனையில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமுக்கு 20 பெண்கள் அழைத்து வரப்பட்டனர். ஆனால், அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் சிகிச்சை மேற்கொள் ளப்பட்டதே பெண்ணின் உயிரிழப் புக்கு முக்கியக் காரணம் என உறவினர்கள் புகார் தெரிவிக் கின்றனர்.

மருத்துவர்கள் அதிர்ச்சி

இந்த உயிரிழப்பால், சிகிச்சை அளித்த மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேவையான மருத்துவ உபகரணங்கள்கூட இல்லாமல் முகாம்களுக்கு வருமாறு மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் கட்டாயப்படுத்துவதாகவும், அங்கு சென்றால் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள்கூட இல்லை எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களை கணக்கு காட்டுவதற்காக இவ்வாறு வசதிகள் குறைபாடுள்ள இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி எங்களை சிகிச்சை அளிக்குமாறு நிர்பந்திக்கிறார்கள். இவ்வாறு, வசதிகள் இல்லாமல் முகாம்கள் நடத்தப்படுவதை அனுமதிக்கக்கூடாது என மருத்துவர்கள் தெரிவிக் கின்றனர்.

வலிப்பு இருந்ததை மறைத்ததால் உயிரிழப்பு

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் பாதிப்படைந்து பெண் உயிரிழந்து தொடர்பாக, முகாமுக்கு ஏற்பாடுகளைச் செய்த மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் (மருத்துவம்) பங்கஜம் கூறும்போது, ‘கலைவாணிக்கு வலிப்பு நோய் இருந்ததையும், 14 வயதில் வலிப்பு நோய் பாதிப்புக்கு உள்ளானதையும் பரிசோதனையின்போது கூறாமல் அவரும், அவரது உறவினர்களும் மறைத்துவிட்டனர்.

வலிப்பு நோய் குறித்து தெரிவித்திருந்தால் இந்த சிகிச்சைக்கு அவரை அனுமதித்து இருக்க மாட்டோம். பாதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்து வரப்பட்ட பின்னரே வலிப்பு நோய் குறித்து அவரது தாயார் தெரிவித்தார்.

கோமா நிலையை அடைந்த அவரை மீட்டு காப்பாற் றுவதற்காக இரவு, பகலாக மருத்துவமனையிலேயே தங்கி அருகில் இருந்து கவனித்து வந்தோம். இருந்தபோதும் பலனளிக்கவில்லை. எங்களாலும் இந்த பாதிப்பில் இருந்து மீள முடியவில்லை” என்றார்.

இது தொடர்பாக, விளக்கம் அளிக்குமாறு சென்னை, சுகாதாரத் துறை, மாவட்ட சுகாதாரத் துறை யிடமும், சம்பந்தப்பட்ட மருத்துவர் களிடமும் அறிக்கை கேட்டுள்ளது. மேலும், விரிவான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT